கோரத்தாண்டவத்தில் கரோனா:
நாடு முழுவதும் கரோனா தொற்றின் இரண்டாவது அலை விஸ்வரூபமெடுத்து பரவி வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் இதுவரை இல்லாத அளவில் கரோனா தொற்றால் 4 ஆயிரத்து 329 பேர் உயிரிழந்துள்ளனர். நாட்டில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 2 கோடியே 52 லட்சத்து 28 ஆயிரத்து 996ஆக உள்ளது. இவர்களில் 2 லட்சத்து 78 ஆயிரத்து 719 பேர் இதுவரை உயிரிழந்துள்ளனர்.
கரோனா தொற்றைக் கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டாலும் அவை விழலுக்கு இறைத்த நீராயின. அந்த அளவிற்கு கரோனாவின் கோரத்தாண்டவம் இருக்கிறது. மே 1ஆம் தேதி முதல் 18 வயதுக்கு மேற்பட்டோர் அனைவரும் கரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ளலாம் என்று மத்திய அரசு தெரிவித்தது. ஆனால், பல்வேறு மாநிலங்களில் கரோனா தடுப்பூசி கையிருப்பில் இல்லை.
விடாமல் எரியும் தகன மேடைகள்:
கரோனா நோயாளிகளுக்கு கொடுக்கப்படும் ரெம்டெசிவிர் மருந்தும் எளிதில் கிடைப்பதில்லை. இவையெல்லாம் ஒரு பக்கம் இருக்க மருத்துவமனைகளில் படுக்கை, ஆக்ஸிஜன் வசதிகள் கிடைக்காமலேயே பல நோயாளிகள் உயிரிழந்துள்ளனர். அப்படி இறந்தவர்களைத் தகனம் செய்யக் கூட சுடுகாட்டில் இடம் கிடைப்பதில்லை.
பல மாநிலங்களில் சுடுகாடு முழுதும் சடலங்கள் மலை போல் குவிந்துள்ளன. தகன மேடைகள் விடாமல் எரிகின்றன.
சிறியவர்கள், பெரியவர்கள் என வயது வித்தியாசமில்லாமல் கரோனாவால் பலரும் இறந்துவரும் சூழலில் நோயாளிகளைக் கொண்டு செல்ல ஆம்புலன்ஸ் கூட கிடைக்காமல் சுமையாகவே தூக்கிச்சென்று புதைக்கும் அவலத்தை எத்தனையோ வைரல் வீடியோக்கள் நமக்கு எடுத்துக் காட்டுகிறது. கரோனாவால் உயிரிழந்த ரத்த சொந்தங்களின் சடலங்களை தொட்டு அழுவதற்குக் கூட, தடுக்கும் அளவுக்கு கரோனா பாதுகாப்பு வழிமுறையில் அமலில் உள்ளது.
கண்ணீர் அஞ்சலி:
அடுத்தது யார் என்று பதைபதைக்க வைக்கும் நிலைமையிலும் மாநில அரசால் விதிக்கப்படும் ஊரடங்கை துச்சமாகக் கூட கருதாமல் ஊர் சுற்றுபவர்கள் இருக்கத்தான் செய்கின்றனர். எனக்கெல்லாம் கரோனா வராது என்று வீணாகப் பேசி வெட்டியாக, ஊர் சுற்றும் நபர்களை கட்டுப்படுத்த அரசு எடுக்கும் முயற்சியும் வீணாகிறது. இந்நிலையில் பொதுமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தும் வகையில் கண்ணீர் அஞ்சலி போஸ்டர் ஒன்று வைரலாகி வருகிறது.
புகைப்படம், பெயர், முகவரி என்று எதுவுமே இல்லாமல் தயாரிக்கப்பட்ட அந்தப் போஸ்டர் கரோனா தொற்றை ஏளனமாக கருதுபவர்களுக்குத்தான் என்பது மட்டும் தெளிவாகியுள்ளது.
உயிர் மேல் அக்கறை இருந்தால் ஊரடங்கை கடைப்பிடியுங்கள் என்று அந்த போஸ்டரில் இருக்கும் வரிகள் 100க்கு 100 உண்மையானது. அதனால் வீட்டிலேயே இருங்கள். விலகி இருங்கள்.