சென்னை: தலைநகர் சென்னையில் கரோனா தொற்றால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை சற்று குறைந்துவருகிறது. அண்ணா நகர், கோடம்பாக்கம், தேனாம்பேட்டை ஆகிய மூன்று மண்டலங்களில் மட்டும் சிகிச்சைப் பெற்றுவருபவர்களில் எண்ணிக்கை 900க்கு மேல் உள்ளது.
தொற்று பாதிப்பை மேலும் குறைக்க அந்தந்த மண்டலங்களில் கூடுதல் மருத்துவ முகாம்களும், விழிப்புணர்வு நிகழ்வுகளும் மாநகராட்சி நிர்வாகம் சார்பில் நடத்தப்படுகின்றன.
மாநகராட்சியில் தினமும் சராசரியாக 30,000 பேருக்கு கரோனா பரிசோதனை செய்யப்படுகிறது. அதில் கிட்டத்தட்ட 300 நபர்கள் மட்டுமே பாதிக்கப்படுகின்றனர். இதன் அடிப்படையில் சென்னையில் கரோனா பரவல் விகிதம் ஒரு விழுக்காடாகக் குறைந்துள்ளது.
நூறு நபர்களுக்குக் கரோனா பரிசோதனை செய்து, அதில் கரோனா உறுதி செய்யப்படுவோர் எண்ணிக்கையை கரோனா பரவல் விகிதம் என்று அழைப்பர்.
அதன்படி சென்னையில் மே 10ஆம் தேதி 26.6%ஆக இருந்தது, இப்போது படிப்படியாக குறைந்து தற்போது 1% ஆக குறைந்துள்ளது.
பாதிக்கப்பட்டவர்களில் அதிகபட்சமாக 22.23 விழுக்காடு 30 முதல் 39 வயது உடையவர்களே இருக்கின்றனர். அடுத்தபடியாக 19.05 விழுக்காடு 40 முதல் 49 வயது உடையவர்கள் ஆவர்.