சென்னை: பிராட்வே பிரகாசம் சாலையில் அமைந்துள்ள பாரதி மகளிர் கல்லூரி வளாகத்தில் அமைக்கப்பட்டு வரும் கரோனா முழு உடல் பரிசோதனை மையத்தை தமிழ்நாடு இந்து அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு, சென்னை மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி ஆகியோர் இணைந்து ஆய்வு செய்தனர்.
அப்போது செய்தியாளர்களைச் சந்தித்த ககன்தீப் சிங் பேடி கூறியதாவது,
டெல்டாவை விட வேகமாகப் பரவும் ஒமைக்ரான்
“தற்போது கரோனா நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. கடந்த ஆண்டு இருந்த டெல்டா வைரஸை விட ஒமைக்ரான் மிகவும் வேகமாக பரவி வருகிறது.
தேனாம்பேட்டை மட்டுமல்லாமல் அனைத்து பகுதிகளிலும் ஒமைக்ரான் பரவல் இருப்பதால் தொற்றுப் பரவலைக் கட்டுப்படுத்த கவனம் செலுத்தி வருகிறோம்.
கடந்த 10 நாள்களுக்கு முன்பு எடுக்கப்பட்ட ஆய்வறிக்கையின்படி 35 சதவீத மக்கள் தான் முகக்கவசம் அணிகிறார்கள். கரோனா எண்ணிக்கை தற்போது அதிகரித்து வருவதால் அனைவரும் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும். முகக்கவசம் அணியும்போது மூக்கு, வாய் பகுதி முழுமையாக மறையும் வகையில் அணிய வேண்டியது அவசியம்.
நோய்த்தொற்றின் அறிகுறிகள்
பொதுவான அறிகுறியாக தற்போது சளி மற்றும் தொண்டை வலி இருந்து வருகிறது. இதனை சாதாரணமாக கருதினால் வீட்டில் இருப்பவர்களுக்கு எளிதில் பரவ வாய்ப்பு அதிகம் உள்ளது.
மேலும், சர்க்கரை நோயாளிகளுக்கு இது வேறு வகையான பிரச்சனைகளை ஏற்படுத்தும். எனவே சளி, காய்ச்சல் போன்ற அறிகுறிகள் இருந்தால் தற்காப்புக்காக உடனடியாக அருகில் உள்ள பரிசோதனை மையத்திற்கு சென்று சோதனை செய்ய வேண்டும்.
மேலும், அறிகுறிகளுடன் இருப்பவர்கள் சென்னை மாநகராட்சி சார்பில் அறிவிக்கப்பட்டுள்ள கட்டுப்பாட்டு அறை எண் 044 25384520, 044 46122300 ஆகியவற்றில் தொடர்பு கொண்டால் இதற்காக பிரத்யேகமாக இருக்கும் மருத்துவர்கள், அறிகுறிகளின் தன்மையை வைத்து வீட்டில் தனிமைபடுத்தி கொள்ள வேண்டுமா? அல்லது சிகிச்சை மையத்திற்கு செல்ல வேண்டுமா? என அறிவுரை செய்வார்கள். தற்காப்பு நடவடிக்கையை மக்கள் மேற்கொண்டால் தான் இந்த வைரஸை கட்டுப்படுத்த முடியும்.
தெரு நாய் தொல்லை
சென்னையில் தெரு நாய்கள் பிரச்சனைகள் குறித்து தெரிவிக்க 1913 என்ற தொலைபேசி எண் உள்ளது. மேலும், மக்களுக்கு பிரச்சனைகள் ஏற்படாமல் இருக்க நாய்களுக்கு ரேபிஸ் ஊசி அளிக்கப்பட்டு வருகிறது.
தொடர்ந்து தெரு நாய்களின் தொல்லை அதிகமாக இருக்கும் பகுதிகள் எங்களின் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டால் அங்குள்ள நாய்களுக்கு ஏபிஸ் ஊசி போட்டு கட்டுப்படுத்தும் நடவடிக்கைகள் எடுக்கப்படும்” என தெரிவித்தார்.
இதையும் படிங்க: 10 லட்சம் இளைஞர்களுக்கு 'பைத்தான்' திறன் பயிற்சி