சென்னை மண்டலத்தில் கரோனா பெருந்தொற்று நோயின் பரவலும், பாதிப்பும் குறைந்திருந்தது. தற்போது அண்ணா நகர், கோடம்பாக்கம், அடையாறு போன்ற பகுதிகளில் மட்டும் புதிய தொற்றாளர்களின் எண்ணிக்கை சற்று உயர்ந்து வருகிறதென மாநகராட்சி தெரிவித்துள்ளது.
அந்த பகுதியில் காவல் துறை, பொதுப்பணித் துறை, சுகாதாரத் துறை என மாவட்ட நிர்வாகத்தின் பல்வேறு துறைகளும் கரோனா பாதிப்பை கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரும் பணிகளில் முழுமூச்சில் ஈடுபட்டு வருகின்றன. முகக்கவசம், கபசுர குடிநீர் வழங்குதல் போன்ற பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன.
அதன் ஒரு பகுதியாக, சென்னையில் உள்ள 15 மண்டலங்களிலும் மருத்துவ முகாம் மற்றும் நடமாடும் பரிசோதனை மையங்களை அமைத்து மக்களுக்கு கரோனா கண்டறிதல் சோதனை செய்யப்பட்டு வருகிறது. நேற்று மட்டும் 9ஆயிரத்து 629 நபர்களுக்கு பரிசோதனை செய்யப்பட்டதில் 164 நபர்களுக்கு மட்டுமே கரோனா உறுதிசெய்யப்பட்டது. இதனால் சென்னையில் கரோனா பரவல் விகிதம் கிட்டத்தட்ட 1.7ஆக குறைந்துள்ளது.
மண்டலவாரியாக பாதிக்கப்பட்டவரின் பட்டியல் :-
அண்ணா நகர் - 25161 பேர்
கோடம்பாக்கம் - 24764 பேர்
தேனாம்பேட்டை - 21924 பேர்
ராயபுரம் - 20008 பேர்
தண்டையார்பேட்டை - 17439 பேர்
திரு.வி.க.நகர் - 18230 பேர்
அடையாறு - 18585 பேர்
அம்பத்தூர் - 16209 பேர்
வளசரவாக்கம் - 14540 பேர்
ஆலந்தூர் - 9500 பேர்
மாதவரம் - 8243 பேர்
பெருங்குடி - 8499 பேர்
திருவொற்றியூர் - 6902 பேர்
சோழிங்கநல்லூர் - 6113 பேர்
மணலி - 3632 பேர்
மேலும் இதுவரை, சென்னையில் மொத்தம் 2 லட்சத்து 29 ஆயிரத்து 74 பேர் கரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதில் 2 லட்சத்து 23 ஆயிரத்து 50 பேர் முழு குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். எஞ்சியுள்ள ஆயிரத்து 959 பேரும் மருத்துவமனைகளில் தீவிர சிகிச்சைப் பெற்று வருகின்றனர். மேலும், 4 ஆயிரத்து 65 பேர் இந்த வைரஸ் தொற்றினால் உயிரிழந்துள்ளனர் என சென்னை மாநகராட்சி தகவல் வெளியிட்டுள்ளது.
இதையும் படிங்க:தடுப்பூசி போட்டுக்கொண்டதில் 447 பேருக்கு எதிர்வினை: மத்திய அரசு