கரோனா வைரஸ் (தீநுண்மி) சென்னையில் அதிதீவிரமாகப் பரவிவருகிறது. அதனைத் தடுக்க மாநகராட்சி முகக்கவசம் வழங்குதல் கபசுரக் குடிநீர் வழங்குதல் போன்ற பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டுவருகிறது.
அதன் ஒரு பகுதியாக அனைத்து மண்டலங்களிலும் மருத்துவ முகாம் அமைத்து கரோனா கண்டறிதல் சோதனை நடத்திவருகிறது.
நேற்று சென்னையில் உள்ள 15 மண்டலங்களில் மொத்தம் 504 மருத்துவ முகாம்கள் நடைபெற்றன. அதிகபட்சமாக திரு.வி.க. நகரில் 56 முகாம்களும் அடுத்தபடியாக தண்டையார்பேட்டையில் 52, அண்ணாநகரில் 50, தேனாம்பேட்டையில் 45, ராயபுரத்தில் 41 மருத்துவ முகாம்களும் நடைபெற்றன.
மொத்தம் 15 மண்டலங்களில் நடைபெற்ற மருத்துவ முகாமில் 35 ஆயிரத்து 43 நபர்களுக்கு கரோனா கண்டறிதல் சோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில் ஆயிரத்து 767 நபர்களுக்கு சிறு அறிகுறி இருந்ததால் அவர்கள் கரோனா மையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டனர். மீதம் உள்ளவர்களுக்கு அவர்களது நோய்க்கு ஏற்ப மருந்து மாத்திரைகள் வழங்கப்பட்டன.
மேலும் ராயபுரத்தில் நடைபெற்ற மருத்துவ முகாம்களையும் கரோனா பரிசோதனை சேகரிக்கும் மையத்தையும் சுகாதாரத் துறை செயலர், கரோனா தடுப்பு சிறப்பு அலுவலர் ராதாகிருஷ்ணன் நேரில் சென்று ஆய்வுசெய்தார்.