சென்னை: பொதுமக்களிடையே குழந்தை பாதுகாப்பு, ஆரோக்கியம் குறித்த கலந்துரையாடல் நிகழ்ச்சிகள் ரயில் நிலையங்கள், ரயில்வே அலுவலகங்கள், ரயில்வே மருத்துவமனைகளில், குடியிருப்புப் பகுதிகள், நடத்தப்பட்டு வருகிறது.
இதன் ஒரு பகுதியாக நேற்று (ஆக. 24) ஆவடியில் உள்ள ரயில்வே மருத்துவமனையில் கரோனா தொற்று குறித்த விழிப்புணர்வு கலந்துரையாடல் நிகழ்ச்சி நடத்தப்பட்டது. இந்நிகழ்ச்சியில் மருத்துவர் சரஸ்வதி செல்வம் வெவ்வேறு வயதுள்ள குழந்தைகளுடைய பெற்றோர்களிடம் கலந்துரையாடினார்.
குழந்தைகளை உற்சாகப்படுத்துங்கள்
முகக்கவசம் அணிதல், கைகளை கழுவுதல், தடுப்பூசி செலுத்திக் கொள்ளுதல் குறித்தான பல்வேறு சந்தேகங்களை இந்த கலந்துரையாடல் நிகழ்ச்சியில் மருத்துவர் பெற்றோரிகளிடம் தெளிவுப்படுத்தினார்கள்.
இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பெற்றோர்களிடம், தங்களது குழந்தைகளிடம் கை கழுவுதல், முகக் கவசம் அணிதல், தனிமனித இடைவெளியை கடைபிடித்தல் போன்ற கரோனா தடுப்பு செயல்முறைகளை கடைபிடிக்க உற்சாகப்படுத்துமாறு அறிவுறுத்தப்பட்டனர். மேலும், 18 வயதுக்கு மேற்பட்ட தங்களது பிள்ளைகளுக்கு தடுப்பூசி செலுத்துதல் குறித்த அவசியத்தை எடுத்துரைக்கப்பட்டது.
பிரத்யேகமாக இளைஞர்கள், குழந்தைகளுக்கான விழிப்புணர்வு கலந்துரையாடல் நிகழ்ச்சிகள் அரக்கோணத்திலுள்ள சென்னை கோட்ட ரயில்வே மருத்துவமனை, அனைத்து ரயில்வே மருத்துவமனை அலகுகளிலும் தொடர்ச்சியாக நடத்தப்பட்டு வருகிறது.
தமிழ்நாட்டில் கரோனா
தமிழ்நாட்டில் புதிதாக ஒரு லட்சத்து 56 ஆயிரத்து 386 நபர்களுக்கு இன்று (ஆக. 25) ஆர்டிபிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. தமிழ்நாட்டில் இருந்த ஆயிரத்து 572 நபர்களுக்கும், கேரளாவில் இருந்து தமிழ்நாட்டிற்கு வந்த ஒருவருக்கும் என 1,573 நபர்களுக்கு கரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் கரோனா தொற்று பரவல் விகிதம் 1.04 விழுக்காடு என அதிகரித்துள்ளது. அதிகபட்சமாக தஞ்சாவூர் மாவட்டத்தில் 2.1 விழுக்காடு, மிகக் குறைந்த அளவாக மதுரை, ராமநாதபுரம், விருதுநகர் ஆகிய மாவட்டங்களில் 0.2 விழுக்காடு என்ற அளவில் நோய்த்தொற்று பரவல் உள்ளது.
சென்னை மாவட்டத்தில் 23 ஆயிரத்து 172 நபர்களுக்கு ஆர்டிபிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அவர்களில் 165 நபர்களுக்கு கரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளது. நோய் பரவல் 0.7 விழுக்காடு என உள்ளது.
அதேபோல் கோயம்புத்தூர் மாவட்டத்தில் 11 ஆயிரத்து 788 நபர்களுக்கு ஆர்டிபிசிஆர் பரிசோதனை செய்யப்பட்டதில் 190 நபர்களுக்கு கரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளது. நோய் பரவல் 1.6 விழுக்காடு என உள்ளது.
இதையும் படிங்க: பழமை மாறாமல் புதுப்பிக்கப்படும் குதிரை வண்டி கோர்ட்