சென்னை மதுரவாயல் அடுத்த ராஜீவ்காந்தி தெரு பகுதியைச் சேர்ந்தவர் பாண்டுரங்கன்(42). கடந்த மாதம் 17ஆம் தேதி இவரது தந்தை முருகேசன் மாயமாகியுள்ளார். இது குறித்து மதுரவாயல் காவல்நிலையத்தில் புகார் அளித்த பாண்டுரங்கன், தானும் தனக்கு தெரிந்த இடங்களிலெல்லாம் முருகேசனைத் தேடியுள்ளார். இறுதியாக முருகேசனின் முழு விவரங்கள் அடங்கிய துண்டுப்பிரசுரத்தை அனைத்து காவல்நிலையங்களுக்கும் விநியோகம் செய்ய ஆரம்பித்துள்ளார்.
அந்த வகையில், ஜூன் மாதம் 22ஆம் தேதி வளசரவாக்கம் காவல்நிலையத்தில் துண்டு பிரசுரம் விநியோகிக்க சென்றபோது, அங்கு அடையாளம் தெரியாத ஆண் ஒருவர் இறந்து கிடப்பதாகவும், தெரிந்தவர்கள் தகவல் தெரிவிக்கவும் என அச்சிடப்பட்டு முருகேசனின் புகைப்படம் ஒட்டப்பட்டிருந்துள்ளது.
இதனைக்கண்டு அதிர்ச்சியடைந்த பாண்டுரங்கன் காவல்நிலையத்தில் விசாரித்தபோது, முருகேசன் ஒரு மாதத்திற்கு முன்பே இறந்துவிட்டதாகவும், அனாதைப் பிணம் என நினைத்து காவலர்களே இறுதிச் சடங்கு நடத்தியதாகவும் கூறியுள்ளனர்.
இச்சம்பவத்தைக் கேட்டு அவ்விடத்திலேயே கதறி அழுத பாண்டுரங்கன், இறுதிச்சடங்கு செய்ய தனது தந்தை முருகேசனின் சடலம் வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளார். பிரேத பரிசோதனை செய்து உடல் அடக்கம் செய்யப்பட்டதால் தங்களால் ஒன்றும் செய்ய முடியாது என்றும், நீதிமன்றம் உத்தரவின்படியே எடுக்க முடியும் எனவும் காவல்துறையினர் பதில் அளித்தனர்.
இதையடுத்து, பாண்டுரங்கன் தனது தந்தையின் உடலைத் தோண்டி எடுத்து சொந்த ஊரில் நல்லடக்கம் செய்ய பாசப் போராட்டம் நடத்தி வருகிறார்.