சென்னை: பொதுமக்களிடம் ஒரு லட்சம் ரூபாய் பணம் கட்டினால் மாதம் ஒன்றுக்கு 30 ஆயிரம் ரூபாய் வட்டித்தொகை தருவதாக கவர்ச்சிகரமான விளம்பரங்களைக் கூறி மோசடியில் ஈடுபட்டதாக, கடந்த 24ஆம் தேதி பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் ஆருத்ரா கோல்டு டிரேடிங் நிதி நிறுவனத்துக்குச் சொந்தமான இடங்களில் சோதனை நடத்தினர்.
இந்த சோதனையில் கணக்கில் வராத ரூ.3.41 கோடி பணம் கொண்ட 11 வங்கிக்கணக்குகளை முடக்கம் செய்து, அதன் இயக்குநர்கள் 14 பேர் மீதும் மற்றும் 5 நிறுவனங்கள் மீதும் பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். மேலும், ஆருத்ராவின் 70 வங்கிக் கணக்குகளை பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் முடக்கம் செய்து நடவடிக்கை எடுத்துள்ளனர்.
ஆருத்ரா நிறுவனத்தின் இயக்குநரான பாஸ்கர் மற்றும் மோகன் பாபு ஆகிய இருவரை கைது செய்த பொருளாதார குற்றப்பிரிவு போலீசார், மீதமுள்ள இயக்குநர்களான ஹரிஷ், உஷா, ராஜசேகர், செந்தில்குமார், பட்டாபிராமன், மைக்கேல் ராஜ் உட்பட பலரைத் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.
இந்நிலையில் இந்த வழக்கில் 4ஆவது குற்றவாளியாக சேர்க்கப்பட்டுள்ள ஹரிஷ் என்பவருக்கு காஞ்சிபுரம் மாவட்ட மாநிலச் செயலாளராக, விளையாட்டு மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை மாநிலத்தலைவர் அமர்பிரசாத் ரெட்டி பொறுப்பு வழங்கி இருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக மோசடிப் புகாரில் பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் ஹரிஷ் மீது வழக்குப்பதிவு செய்து தேடப்பட்டு வந்த நிலையில் பொறுப்பு வழங்கி உள்ளனர். மேலும் ஹரிஷ் உயர் நீதிமன்றத்தில் ஜாமீன் கோரிய மனுவும் தள்ளுபடியானது குறிப்பிடத்தக்கது.
ஏற்கெனவே, கொலை வழக்கில் தேடப்பட்டு வந்த கல்வெட்டு ரவி, புளியந்தோப்பு அஞ்சலை உட்பட பலர் பாஜகவில் இணைந்துள்ள நிலையில், தற்போது மோசடி வழக்கில் சிக்கிய ஹரிஷூக்கு பொறுப்பு வழங்கியிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: ஆருத்ரா நிதி நிறுவனத்தின் ரூ.100 கோடி சொத்து முடக்கம் ? - பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் அதிரடி நடவடிக்கை..