காங்கிரஸ்-திமுக இடையே தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தையில் தொடர்ந்து இழுபறி நீடித்து வரும் நிலையில், தமிழ்நாடு காங்கிரசின் விரிவுபடுத்தப்பட்ட செயற்குழு கூட்டம் இன்று காலை சென்னை சத்தியமூர்த்தி பவனில் கூடியது. மாநிலத் தலைவர் கே.எஸ்.அழகிரி தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில், மேலிடப் பொறுப்பாளர் தினேஷ் குண்டுராவ், மூத்தத் தலைவர்கள் வீரப்ப மொய்லி, பள்ளம் ராஜு, நிதின் ராவத் மற்றும் நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
காங்கிரஸ் நிர்வாகிகளிடம், எத்தனை இடங்களை வழங்கினால் திமுக கூட்டணியில் தொடரலாம்? கூட்டணியிலிருந்து வெளியேறி தனித்து போட்டியிடலாமா? உள்ளிட்ட கருத்துகள் கேட்கப்பட்டது. அதனை காங்கிரஸ் மேலிடத்திற்கு தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில், 41 தொகுதிகளுக்கு குறையாமல் வழங்க வேண்டும் என மாவட்ட நிர்வாகிகள் கருத்து தெரிவித்திருந்த நிலையில், 27 இடங்கள் வரை வழங்கினால் போதும் என காங்கிரஸ் முடிவுக்கு வந்துள்ளதாகவும், ஆனால் திமுக தரப்பு 18 தொகுதிகள் வரை மட்டுமே தர முன்வந்துள்ளதாக காங்கிரஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அத்துடன் காங்கிரஸ் தரப்பில் ஒரு மாநிலங்களவை உறுப்பினர் பதவி கேட்டு, அதற்கும் திமுக மறுத்துவிட்டதாகக் கூறப்படுகிறது.
இதனிடையே ஆலோசனைக்குப் பின்னர் வெளியே வந்த வீரப்ப மொய்லியிடம் செய்தியாளர்கள் கேட்டதற்கு, இன்றோ நாளையோ தொகுதிப் பங்கீடு இறுதியாகும் எனத் தெரிவித்தார். ஆனால், மேற்கொண்டு எந்த கேள்விக்கும் பதிலளிக்காமல் அவர் சென்று விட்டார்.
இதையும் படிங்க: சட்டப்பேரவை தேர்தல் 2021; மார்ச் 8ஆம் தேதி அமமுக நேர்காணல்!