சென்னை: வேப்பேரியில் உள்ள காவல் ஆணையர் அலுவலகத்தில் தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் ஆர்.டி.ஐ. பிரிவுத் தலைவர் கனகராஜ் நேற்று (அக். 12) புகார் ஒன்றை அளித்தார்.
அந்தப் புகாரில், "காங்கிரஸ் தலைவர்கள் குறித்தும், காங்கிரஸ் கட்சியினர் குறித்தும் அவதூறு கருத்துகளைப் பரப்பி, பொது அமைதிக்கு நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் குந்தகம் விளைவித்துவருகிறார்.
தொடரும் அவதூறு பேச்சு
இதனால், அவர் மீது தேசியப் பாதுகாப்புச் சட்டத்தின்கீழ் நடவடிக்கை எடுத்து அவரைக் கைதுசெய்யாவிட்டால் பொது அமைதிக்குப் பாதிப்பு ஏற்படும் வகையில் கலவரம் வெடிக்க வாய்ப்புள்ளது" எனக் குறிப்பிடப்பட்டுள்து.
புகார் அளித்தபின் செய்தியாளரைச் சந்தித்த கனகராஜ், "கடந்த அக்டோபர் 10ஆம் தேதி கன்னியாகுமரி மாவட்டம் தக்கலையில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசும்போது, தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியினர் குறித்தும், காங்கிரஸ் தலைவர்கள் ராஜிவ் காந்தி, சோனியா காந்தி, ராகுல் காந்தி ஆகியோர் குறித்தும் மிகவும் கொச்சையான சொற்களைப் பயன்படுத்திப் பேசினார்.
கைது நடவடிக்கை வேண்டும்
தொடர்ச்சியாக காங்கிரஸ் தலைவர்கள், ஒட்டுமொத்த காங்கிரஸ் கட்சியினர் குறித்து அவதூறு கருத்துகளைப் பரப்பிவருவது கண்டனத்திற்குரியது. இது பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் செயலாக உள்ளது.
மக்களிடையே வேறுபாட்டை விதைத்து, ஒற்றுமையைக் குலைக்கும் சீமானின் இந்தச் செயலைத் தடுக்கும்விதமாக ஏற்கனவே காங்கிரஸ் கட்சியினர் சார்பில் தேர்தல் ஆணையத்திலும், காவல் துறைத் தலைவர் அலுவலகத்திலும் அவர் மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது. அதன் தொடர்ச்சியாக சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
சீமான் பொதுக்கூட்டங்களில் கலந்துகொள்ள தடைவிதித்து அவர் மீது தேசியப் பாதுகாப்புச் சட்டத்தின்கீழ் நடவடிக்கை எடுத்து கைது நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்" எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க: ’நாம் தமிழர் கட்சி பயங்கரவாத அமைப்பாக மாற வாய்ப்பு’ - கே.எஸ். அழகிரி