விவசாயிகளுக்கு வழங்கும் இலவச மின்சாரத்தை ரத்துசெய்யும் வகையில், மத்திய பாஜக அரசு செயல்பட்டுவருவதாகக் குற்றம்சாட்டி தமிழ்நாடு காங்கிரஸ் சார்பாக சென்னையில் பல்வேறு பகுதிகளில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.
அதன்படி, தமிழ்நாடு காங்கிரஸ் முன்னாள் தலைவர் தங்கபாலு தலைமையில் அண்ணா சாலையிலும், நாடாளுமன்ற உறுப்பினர் திருநாவுக்கரசர் தலைமையில் அவரது வீட்டின் முன்பும், அகில இந்திய காங்கிரஸ் செயலாளர் மையப்பன் தலைமையில் சைதாப்பேட்டையிலும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
அதேபோல், சென்னை சத்தியமூர்த்தி பவனில் காங்கிரஸ் முன்னாள் மாநிலத் தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில், பாஜக அரசையும், பிரதமர் மோடியையும் கண்டித்து முழக்கங்கள் எழுப்பப்பட்டன.
பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த ஈ.வி.கே.எஸ். இளங்கோவன், "தமிழ்நாடு விவசாயிகளுக்கு 30 ஆண்டுகளுக்கும் மேலாக இலவச மின்சாரம் வழங்கப்பட்டுவருகிறது.
தற்போது, மத்திய அரசு புதிதாக ஒரு திட்டம் தீட்டி இலவச மின்சாரத்தை ரத்துசெய்யும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளது. விவசாயிகள் மீது எந்தவிதமான அக்கரையுமே இல்லாத அரசு மத்திய பாஜக அரசு.
கரோனாவைக் கட்டுப்படுத்துவதில், ஆரம்பத்தில் விரைவாகச் செயல்பட்ட தமிழ்நாடு அரசு தற்போது சுணக்கமாகச் செயல்பட்டுவருகிறது. ஆப்பிரிக்க நாடுகளில் மக்கள் உணவுக்காக அலைவதுபோல், தற்போது இங்கு குடிபெயர்ந்த தொழிலாளர்களின் நிலை உள்ளது.
மேலும், பொதுத் துறை நிறுவனங்கள் பலவற்றை தனியார் நிறுவனங்களாக மாற்ற மத்திய அரசு முயற்சிகள் செய்துவருகிறது. பிரதமர் நரேந்திர மோடி இந்தக் கரோனா காலத்திலும் மக்கள்விரோத கொள்கைகளைப் புகுத்திவருகிறார்” எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க: 'பொருளாதாரம் வீழ்ச்சி அடைந்ததற்கு காரணம் இதுதான்'