நேற்றைய தினம் தமிழ்த் திரைத்துறையின் முன்னணி இயக்குநரான பாரதிராஜாவின் 79ஆவது பிறந்தநாளையொட்டிது திரைத்துறையினர் பலர் வாழ்த்துகளைத் தெரிவித்தினர். இதோடு திரைத்துறைக்கு அவர் ஆற்றிய பங்கிற்கு, தாதா சாகேப் பால்கே விருது வழங்கி கெளரவிக்க வேண்டும் என்ற குரல் எழுந்தது. கமல்ஹாசன், வைரமுத்து, மணிரத்னம், தனுஷ் உள்ளிட்ட 25க்கும் மேற்பட்ட திரைத்துறையினர் மத்திய அமைச்சர் ஜவடேகருக்கு இதனை வலியுறுத்தி கடிதம் எழுதியிருந்தனர்.
"மனித வாழ்வியலை அணு அணுவாக செதுக்கியவர் பாரதிராஜா"- ஆர். வி. உதயகுமார்
இவ்வேளையில் இதே கோரிக்கையை வலியுறுத்தி காங்கிரஸ் மக்களவை உறுப்பினர் மாணிக்கம் தாகூர் மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகருக்கு கடிதம் எழுதியுள்ளார். அவர் எழுதியுள்ள கடிதத்தில், ”நான்கு தசாப்தங்களாக தமிழ்நாட்டின் கலாசாரம் மற்றும் பண்பாடுகளை திரைப்படங்கள் மூலம் மக்களிடம் எடுத்துச் சென்றுள்ளார் இயக்குநர் பாரதிராஜா. 1977ஆம் ஆண்டு முதல் தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட மொழிகளில் மொத்தம் 42 படங்களை இயக்கியுள்ளார்.
2004ஆம் ஆண்டில் அவருக்கு பத்மஸ்ரீ விருது வழங்கப்பட்டது. ஆகவே, தாதா சாகேப் பால்கே விருதை வழங்குவதன் மூலம் அவரது படைப்புக் கலையை மத்திய அரசு அங்கீகரித்தால், இந்திய சினிமாவுக்கு அவர் செய்த சேவைக்கு நாம் அளிக்கும் மரியாதையாக இருக்கும்” என்று குறிப்பிட்டார்.