தமிழ்நாடு காங்கிரஸ் தலைமை அலுவலகமான சத்தியமூர்த்தி பவனில், செய்தியாளர்களைச் சந்தித்த காங்கிரஸ் செயல்தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான விஷ்ணுபிரசாத், ”பி.எம். கிசான் திட்டத்தின்கீழ் வீடுகள் ஒதுக்குவதில் நிறைய முறைகேடுகள் நடக்கின்றன. இதற்கான ஆதாரங்கள் என்னிடம் உள்ளன. திருவண்ணாமலை மாவட்டத்தில் மட்டும் இந்தத் திட்டத்தின்கீழ் 5000 வீடுகள் வரை தவறாக ஒதுக்கீடு செய்துள்ளனர்.
மாநிலம் முழுவதும் இதுவரை இத்திட்டத்தில் 10 ஆயிரம் கோடி ரூபாய் வரை ஊழல் நடைபெற்றுள்ளது. இவ்வளவு நடைபெற்றும் மாநில உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்.பி. வேலுமணி இவ்விவகாரத்தில் ஏன் மவுனமாக இருக்கிறார் எனத் தெரியவில்லை.
மாநில அரசு செய்யும் ஊழலை, மத்திய அரசு கண்டு கொள்ளாமலேயே இருக்கிறது. எனவே, இந்த ஊழலில் அவர்களுக்கும் பங்கு உள்ளதோ என்ற கேள்வி எழுகிறது. ஊழல் குறித்து முதலமைச்சர், ஆளுநர் என அனைவருக்கும் கடிதம் எழுதியும், இதுவரை எந்த பதிலும் இல்லை. இதுபற்றி, வரும் நாடாளுமன்ற கூட்டத்தொடரில் கேள்வி எழுப்புவோம்.
நாட்டிற்கே நீட் தேர்வு சாபக்கேடாக அமைந்துள்ளது. தமிழ்நாட்டின் கடந்த கால முதலமைச்சர்கள் இதை எதிர்த்தனர். ஆனால், தற்போதைய முதலமைச்சர் எதிர்க்க தவறிவிட்டார். அதிமுக அரசு தொடர்ந்து நீடிக்குமா என்பது வரும் தேர்தலில் தெரிந்துவிடும். மக்களின் உணர்வும் அவ்வாறாக இல்லை“ எனக் கூறினார்.
இதையும் படிங்க: கொள்முதல் நிலையத்தில் தேக்கமடையும் நெல் மூட்டைகள்: விவசாயிகள் வேதனை!