தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல் 2021 இன்னும் சில மாதங்களில் நடைபெறவுள்ளது. இந்தத் தேர்தலில், திமுக தலைமையிலான கூட்டணியும், அதிமுக தலைமையிலான கூட்டணியும் பலப்பரீட்சையில் ஈடுபடுகின்றன.
திமுக கூட்டணியில் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளும், அதிமுக கூட்டணியில் பாஜக உள்ளிட்ட கட்சிகளும் இடம்பெறுகின்றன.
இந்த நிலையில், திமுக தலைவர் மு.க. ஸ்டாலினை காங்கிரசின் தமிழ்நாடு மேலிடப் பொறுப்பாளர் தினேஷ் குண்டுராவ், மாநிலத் தலைவர் கே.எஸ். அழகிரி இன்று மாலை சந்திக்கின்றனர்.
மாலை 6.30 மணியளவில் நடைபெறும் இந்தச் சந்திப்பில், தொகுதிப் பங்கீடு குறித்து பேசப்படுவதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
இரண்டு நாள்களுக்கு முன்பு தமிழ்நாடு காங்கிரஸ் முக்கிய நிர்வாகிகளுடன் ராகுல் காந்தி ஆலோசனை நடத்தியதைத் தொடர்ந்து தற்போது இந்தச் சந்திப்பு நடைபெற உள்ளது.
மாநில காங்கிரஸ் நிர்வாகிகளிடம் ராகுல் பேசுகையில், தமிழ்நாட்டில் பூத் வாரியாக காங்கிரஸ் வலுவாக உள்ளது. எனவே, காங்கிரஸ் தொண்டர்களை தேர்தல் பணியாற்ற உற்சாகப்படுத்துங்கள் என்று அறிவுறுத்தினார்.
சில நாள்களுக்கு முன்பு, தினேஷ் குண்டுராவ், "இந்தத் தேர்தலில் திமுகவுக்கு வலுசேர்க்கும் வகையில் காங்கிரஸ் துணையாக இருக்கும். குறைந்தது 100 தொகுதிகளில் திமுகவின் வெற்றிக்கு காங்கிரஸ் பக்கபலமாக இருக்கும்" என்று கூறியிருந்தது கவனிக்கத்தக்க ஒன்றாகும்.