2019 ஆசிரியர் தகுதித்தேர்வுக்கான தாள் 1, 2 ஆகியவற்றினை எழுதுவதற்கு தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்கள் இணையதளம் மூலம் மட்டுமே விண்ணப்பிக்கலாம் என ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்திருந்தது. ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரை மாணவர்களுக்கு கற்பிப்பதற்கு குழந்தைகளுக்கான இலவச கட்டாயக் கல்விச் சட்டம் 2009 மற்றும் தேசிய ஆசிரியர் கவுன்சில் ஆகியவை தகுதிகளை வரையறுத்துள்ளது.
இந்தத் தேர்வினை நடத்துவதற்கான முகமையாக தமிழக அரசால் ஆசிரியர் தேர்வு வாரியம் நியமனம் செய்யப்பட்டுள்ளது.
ஆசிரியர் தகுதித்தேர்வு 2019 ஆம் ஆண்டிற்கான அறிவிப்பு 28.2.2019 அன்று வெளியிடப்பட்டது.அதில் ஆசிரியர் தகுதி தேர்வுக்கு ஆன்லைன் மூலம் மார்ச் 15-ம் தேதி முதல் ஏப்ரல் 5-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டிருந்தது. மேலும், அதற்கான எழுத்துத்தேர்வு நடைபெறும் நாட்கள் பின்னர் அறிவிக்கப்படும்.
இந்நிலையில், இன்று (மார்ச் 15) ஆசிரியர் தகுதித் தேர்வு எழுதுவதற்கு ஏராளமானோர் ஆர்வத்துடன் காலையிலேயே ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க முயன்றுள்ளனர். ஆனால், ஆசிரியர் தேர்வு வாரிய அதிகாரபூர்வ இணையதளத்தில் 15-ம் தேதி இரவு 11 மணி முதல் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் விண்ணப்பம் செய்ய வந்தவர்கள் பெருத்த ஏமாற்றமடைந்ததாக தெரிவித்தனர்.