சென்னை: (School Education Department Transfer) பள்ளிக்கல்வித்துறையில் பணியாற்றி வரும் வட்டாரக்கல்வி அலுவலர்களுக்கான பணியிட மாறுதல் மற்றும் பதவி உயர்வு கலந்தாய்வு வரும் 28ஆம் தேதி முதல் 29ஆம் தேதி வரையில் நடைபெறுகிறது எனவும், இதற்கான விண்ணப்பங்களை இன்று (டிசம்பர் 21) முதல் சமர்ப்பிக்கலாம் எனவும் தொடக்கக் கல்வித்துறை அறிவித்துள்ளது.
கட்டயாமக்கப்பட்ட இடம் மாற்றம்
மேலும் 2 ஆண்டுகளுக்கு மேல் ஒரே இடத்தில் பணிபுரிந்தவர்களுக்கு கட்டாயம் இட மாறுதல் வழங்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
வட்டாரக் கல்வி அலுவலர்கள் தொடர்ந்து ஒரே இடத்தில் பணியாற்றி வருவதால், பள்ளி கல்வியின் தரத்தை மேம்படுத்துவதில் தொடர்ந்து தொய்வு ஏற்பட்டு வருகிறது. மேலும் பள்ளியின் பாதுகாப்பிலும் குறைபாடுகள் இருப்பதாகத் தெரியவருகிறது. இந்த நிலையில் தொடர்ந்து ஒரே இடத்தில் பணியாற்றுவதைத் தடுக்கும் வகையில் கலந்தாய்வில் பல்வேறு மாறுதல்கள் செய்யப்பட்டுள்ளன.
தொடக்கக் கல்வி இயக்குநரின் கடிதம்
இது குறித்து அனைத்து மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர்களுக்கு தொடக்கக் கல்வி இயக்குநர் அறிவொளி அனுப்பி உள்ள கடிதத்தில், '2021-2022ஆம் கல்வி ஆண்டிற்கான வட்டாரக் கல்வி அலுவலர் மாறுதல் பணிகள் நடைபெறவுள்ளன.
தற்போது பணிபுரியும் ஒன்றியங்களில் 30.11.2021 நிலவரப்படி இரண்டு ஆண்டுகளுக்கும் மேல் பணிபுரியும் வட்டாரக் கல்வி அலுவலர்கள் கட்டாயமாக பொது மாறுதல் கலந்தாய்வில் கலந்துகொள்ள வேண்டும்.
30.11.2021 நிலவரப்படி இரண்டு ஆண்டுகள் பணிமுடிக்காதவர்களும் விருப்பத்தின் அடிப்படையில் மாறுதல் கலந்தாய்வில் கலந்துகொள்ளலாம்.
2021-2022ஆம் கல்வி ஆண்டில் ஓய்வு பெறும் வட்டாரக் கல்வி அலுவலர்கள், தற்போதைய ஒன்றியத்தில் 30.11.2021 நிலவரப்படி இரண்டு ஆண்டுகளுக்கும் மேல் பணிபுரிந்திருந்தாலும் பொது மாறுதல் கலந்தாய்வில் கலந்துகொள்வதிலிருந்து விலக்கு அளிக்கப்படுகிறது .
வட்டாரக் கல்வி அலுவலர்களுக்கு முதலில் மாவட்டத்திற்குள்ளான மாறுதல் கலந்தாய்வும்; பின்னர் மாவட்டம் விட்டு மாவட்டம் மாறுதல் கலந்தாய்வும் நடைபெறும்.
நடுநிலைப்பள்ளி தலைமையாசிரியர் பணியிலிருந்து பணிமாறுதல், பதவி உயர்வு மூலம் வட்டாரக்கல்வி அலுவலர்களாக நியமனம் பெற்றவர்கள் தாங்கள் கடைசியாக நடுநிலைப்பள்ளி தலைமையாசிரியர்களாகப் பணிபுரிந்த ஒன்றியத்தை மாறுதல் கலந்தாய்வில் தேர்வு செய்தல் கூடாது.
தற்போது பணிபுரியும் இடத்தைத் தேர்வு செய்யத் தடை
மாறுதல் கலந்தாய்வில் கலந்துகொள்ளும் வட்டாரக் கல்வி அலுவலர்கள், தற்போது பணிபுரியும் ஒன்றியத்தை மாறுதல் கலந்தாய்வில் மீண்டும் தேர்வு செய்யக்கூடாது.
மாறுதல் கலந்தாய்வில் கலந்துகொண்டவர்களின் முன்னுரிமை அவர்கள் முதன் முதலில் வட்டாரக் கல்வி அலுவலர் பதவியில் பணியில் சேர்ந்த தேதியின் அடிப்படையில் நிர்ணயம் செய்யப்படும்.
வட்டாரக் கல்வி அலுவலர் பதவியில் பணியில் சேர்ந்த தேதி ஒன்றாக இருக்கும்பட்சத்தில், அவர்கள் தற்போது பணிபுரியும் ஒன்றியத்தில் பணியில் சேர்ந்த தேதியின் அடிப்படையில் முன்னுரிமை நிர்ணயம் செய்யப்படும்.
தற்போது பணிபுரியும் ஒன்றியங்களில் இரண்டு ஆண்டுகளுக்கும் மேல் பணிபுரியும் வட்டாரக் கல்வி அலுவலர்கள் மாறுதல் கலந்தாய்வுக்குத் தனியாக விண்ணப்பிக்கத் தேவையில்லை.
ஒன்றியத்தில் இரண்டு ஆண்டுகள் பணிமுடிக்காதவர்கள், கலந்தாய்வில் கலந்துகொள்ள விருப்பம் உள்ளவர்கள் விண்ணப்பத்தை பூர்த்தி செய்து முதன்மைக்கல்வி அலுவலர்களிடம் நாளைக்குள் அளிக்க வேண்டும்.
வட்டாரக்கல்வி அலுவலர்களுக்கு மாவட்டத்திற்குள் 28ஆம் தேதி காலையிலும், மாவட்டம் விட்டு மாவட்டம் இடமாறுதல் செய்வதற்கான கலந்தாய்வு 28ஆம் தேதி மாலையிலும், நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் பணியில் இருந்து வட்டாரக் கல்வி அலுவலராகப் பதவி உயர்வு பெறுவதற்கான கலந்தாய்வு 29ஆம் தேதி காலையிலும் நடைபெறும்' என அதில் கூறப்பட்டுள்ளது.
இதையும் படிங்க:ஜிஎஸ்டி வரி உயர்வு - கைத்தறி நெசவாளர்கள் ஆர்ப்பாட்டம்