சென்னை: தமிழ்நாடு பாஜக மற்றும் அதன் மாநில தலைவர் அண்ணாமலை குறித்து அவதூறு பரப்பும் வகையில் தனியார் பத்திரிக்கை பெயரில் போலியாக அட்டைப்படம் தயாரித்து சமூக வலைதளங்களில் பரப்பி வரும் நபர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கக்கோரி அக்கட்சியின் மாநில துணைத்தலைவர் பால் கனகராஜ் மற்றும் தகவல் தொழில்நுட்பத்துறை மாநிலத் தலைவர் சி.டி.ஆர் நிர்மல் குமார் ஆகியோர் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்தனர்.
பின்னர் செய்தியார்களை சந்தித்த நிர்மல் குமார், “தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை குறித்து உண்மைக்கு புறம்பான பல கருத்துக்கள் சமீபத்தில் சமூக வலைதளங்கள் வாயிலாக பரப்பப்பட்டு வருகிறது. குறிப்பாக பிரபல தனியார் பத்திரிக்கை பெயரில் போலியான அட்டைப்பக்கத்தை தயாரித்து பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை குறித்து உண்மைக்கு புறம்பான அவதூறு கருத்துக்களை, அதன் மூலம் பரப்பி வருகின்றனர்.
அண்ணாமலை, பாஜக மத்திய அமைச்சர்களில் ஒரு முக்கிய புள்ளிக்காக ரூ.5,000 கோடியை அமெரிக்காவில் முதலீடு செய்யும் அசைன்மெண்டுக்காக அமெரிக்கா சென்றுள்ளதாக போலி பத்திரிக்கை அட்டைப்படம் மூலம் அவதூறு பரப்பி வருகின்றனர்.
அவர், இந்த அட்டைப்படத்தின் புகைப்படத்தை ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்து பரப்பி வரும் யூடியூப் புரூட்டஸ் உட்பட 16 நபர்களின் பட்டியலை எடுத்து புகாருடன் இணைத்து மத்திய குற்றப்பிரிவு சைபர் கிரைம் போலீசாரிடம் புகார் அளித்துள்ளோம்.
பாஜக குறித்தும், மாநில தலைவர் அண்ணாமலை குறித்தும் அவதூறு பரப்பும் நபர்கள் குறித்து ஏற்கனவே பலமுறை புகார் அளித்தும் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இந்த விவகாரத்தில் காவல்துறை உடனடியாக நடவடிக்கை எடுத்து சம்மந்தப்பட்ட நபர்களின் சமூக வலைதளப் பக்கத்தை முடக்கி அவர்கள் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தங்களுக்கு எதிரான கருத்துக்களை எதிர்கொள்ள தமிழ்நாடு பாஜக தயக்கம் காட்டவில்லை, அரசியல் ரீதியிலான எதிர்மறை கருத்துக்கள் மற்றும் குற்றச்சாட்டுகளை பிரதான எதிர்கட்சி என்ற முறையில் தாங்கள் முன்வைத்து வருவகிறோம்” என்று தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: ‘கோபுரம் கோபுரம் தான் குப்பை குப்பை தான்... இது ஒரு சாடிஸ்ட் அரசாங்கம்’ - திமுக ஆட்சியை விலாசிய ஜெயக்குமார்