சென்னை: தேனி மாவட்டம், உப்பார்பட்டியைச் சேர்ந்த ஞானராஜன் என்பவர் தாக்கல் செய்த மனுவில், வடவீரநாயக்கன்பட்டி கிராமத்தில், அரசு நிலங்களிலிருந்து, அனுமதியின்றி, 500 கோடி ரூபாய் மதிப்புள்ள கிராவல் மணலை உதவியாளர்கள் மூலமாக முன்னாள் முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் எடுத்துள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
அதிமுக ஆட்சிக்கு வந்ததிலிருந்து ஓ.பன்னீர்செல்வம், தனது உதவியாளர் அன்னபிரகாசம் மற்றும் அவரது உறவினர்கள் மூலம் இந்த முறைகேட்டில் ஈடுபட்டுள்ளதாக அம்மனுவில் குறிப்பிட்டுள்ளார்.
அரசு நிலங்களிலிருந்து மணல் எடுத்த பிறகு, அந்த நிலங்கள் தனியார் சொத்துகளாக மாற்றம் செய்யப்பட்டுள்ளதாகவும் மனுவில் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக லஞ்ச ஒழிப்புத்துறை விசாரணைக்கு உத்தரவிடக்கோரி புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என மனுவில் குறிப்பிட்டுள்ளார். இந்த வழக்கு நீதிபதி சந்திரசேகரன் முன்பாக இன்று(பிப்.10) விசாரணைக்கு வந்தது.
அப்போது, அரசு தரப்பில், கனிம வளத்துறையைச் சேர்ந்த 5 அலுவலர்கள், வருவாய்த்துறையைச் சேர்ந்த 6 அலுவலர்கள் மற்றும் ஒரு தனி நபர் என 12 பேருக்கு எதிராக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், விரிவான அறிக்கை தாக்கல் செய்ய அவகாசம் வேண்டுமென கோரிக்கை வைக்கப்பட்டது.
அதனை ஏற்று அவகாசம் வழங்கிய நீதிபதி, விசாரணையை அடுத்த வாரம் தள்ளிவைத்துள்ளார்.
இதையும் படிங்க: Hijab Row: இஸ்லாமியர்களை தனிமைப்படுத்தும் முயற்சி நடைபெறுகிறது - இமாம் கவுன்சில் குற்றச்சாட்டு