சென்னை: நாட்டில் 73ஆவது குடியரசுத் தினவிழா நேற்று(ஜன.26) கொண்டாடப்பட்டது. அந்த வகையில், சென்னையில் உள்ள ரிசர்வ் வங்கியில் குடியரசுத்தின நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் தமிழ்த் தாய் வாழ்த்தின் போது, வங்கி அலுவலர்கள் எழுந்து நிற்கவில்லை என்றும், காரணம் கேட்டதற்கு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர் என்றும் செய்திகள் வெளியாகின.
இதுகுறித்த வீடியோ ஒன்று வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியது. இதற்கு தமிழ் ஆர்வலர்கள், அரசியல், சினிமா பிரமுகர்கள் கடும் கண்டனம் தெரிவித்துவருகின்றனர். இதனிடையே , சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞர் ராஜேஷ் என்பவர் தமிழ்த்தாய் வாழ்த்தின்போது எழுந்த நிற்காத ரிசர்வ் வங்கி அலுவலர்கள் மீது நடவடிக்கை எடுக்குமாறு சென்னை காவல் ஆணையத்தில் ஆன்லைன் மூலம் புகார் அளித்துள்ளார்.
விரிவான விசாரணை நடத்தி நடவடிக்கை
இதுகுறித்து அவரது புகாரில், தமிழ்நாடு அரசு வெளியிட்ட அரசாணையின்படி, கல்வி நிறுவனங்கள், அரசு அலுவலகங்கள், பொதுத் துறை நிறுவனங்களில் நடத்தப்படும் நிகழ்ச்சிகளில் தமிழ்த்தாய் வாழ்த்துப்பாடல் கட்டாயம் இடம்பெறவேண்டும். இசைக்கருவிகள் மூலம் மட்டும் பாடலை வாசிக்காமல், பயிற்சி பெற்ற பாடகர்களை வைத்து பாட வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், சென்னை, ரிசர்வ் வங்கியின் அலுவலர்கள் சிலர் தமிழ்த்தாய் வாழ்த்து பாடலின்போது எழுந்து நிற்க மறுத்துள்ளனர். இதுகுறித்து செய்தி நிறுவனங்களில் செய்தி, வீடியோ வெளியாகியுள்ளது. இந்த அலுவலர்களின் செயல், தமிழ்த்தாய் வாழ்த்தை அவமதிக்கும்படி உள்ளது. எனவே, இதுகுறித்து விரிவான விசாரணை நடத்தி தக்க நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக் கொள்கிறேன்" எனக் குறிப்பிட்டுள்ளார்.
இதையும் படிங்க: 'தமிழ்த்தாய் வாழ்த்தின் போது எழுந்து நிற்க மறுப்பது தாய்மொழியை அவமதிப்பதாகும்'