தமிழ்நாட்டில் கரோனா பரவல் அதிகரித்து வருகிறது. குறிப்பாக சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் மாவட்டங்களில் அதன் தாக்கம் மிகத் தீவிரமாகியுள்ளது. சென்னையில் மாநகராட்சிக்குட்பட்ட ராயபுரம், தண்டையார்பேட்டை, கோடம்பாக்கம் மண்டலங்களில் நாளுக்கு நாள் கரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில், சென்னையில் மட்டும் இதுவரை 16 ஆயிரத்து 585 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். நோய் பரவலைக் கட்டுப்படுத்த மாநகராட்சி சார்பில், பல்வேறு தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இந்நிலையில், கோடம்பாக்கம் மண்டலத்தில் எம்.ஜி.ஆர் நகரில் உள்ள 138ஆவது வார்டில், நேற்று ஒரே நாளில் 50க்கும் மேற்பட்டோருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டது. இதனால் அப்பகுதியில் உள்ள அனைத்துக் கடைகளையும் மூட மாநகராட்சி உத்தரவிட்டு, அப்பகுதி முழுவதும் கிருமி நாசினி தெளிக்கப்பட்டு கட்டுப்படுத்தப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே, இன்று அப்பகுதிக்கு நேரில் சென்ற மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் அங்கு மேற்கொள்ளப்பட்டு வரும் தடுப்புப் பணிகள் குறித்து ஆய்வு செய்தார். அங்கு பணியில் இருந்த மாநகராட்சி அலுவலர்களிடம் கலந்துரையாடிய ஆணையர், பின்னர் ராணி அண்ணா நகர் மற்றும் பிருந்தாவன் டவர்ஸ் பகுதிகளுக்கும் சென்று ஆய்வு மேற்கொண்டார். நேற்றைய நிலவரப்படி கோடம்பாக்கம் மண்டலத்தில் மட்டும் 1,921 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: கிருமிநாசினி தெளிக்கும் இருசக்கர வாகனங்களை தொடங்கி வைத்த முதலமைச்சர்