தமிழ்நாட்டில், ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகத்தின்கீழ், 7 அரசு கல்லூரிகள் உள்பட 731 கல்வியியல் கல்லூரிகள் செயல்பட்டுவருகின்றன. அக்கல்லூரிகள் ஒவ்வொரு ஆண்டும், தேசிய ஆசிரியர் கல்விக் குழுமத்திடம் (NCTE), புதிய மாணவர் சேர்க்கைக்கான அனுமதியைப் பெற வேண்டியது கட்டாயம்.
நடப்புக் கல்வியாண்டில் மாணவர் சேர்க்கையை மேற்கொள்ள, அனுமதி நீட்டிப்பு, அங்கீகார நீட்டிப்புக்கோரி விண்ணப்பித்திருந்த கல்வியியல் கல்லூரிகளின் விண்ணப்பத்தை பரிசீலித்த என்.சி.டி.இ., உரிய கட்டமைப்பு வசதிகள் இல்லாத 58 கல்லூரிகளுக்கு அறிவிக்கை அனுப்பியிருந்தது. இருப்பினும் உரிய விளக்கம் அளிக்காததால் 58 கல்வியியல் கல்லூரிகளின் அங்கீகாரத்தையும் என்.சி.டி.இ. ரத்துசெய்துள்ளது.
மேலும், 13 கல்வியியல் கல்லூரிகள், தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகத்தின் இணைப்பு பெறாததால், அந்தக் கல்லூரிகளும் மாணவர் சேர்க்கை நடத்த முடியாது.
எனவே, மொத்தம் 71 கல்வியியல் கல்லூரிகள் விதிகளுக்குப் புறம்பாக உள்ளதால், அக்கல்லூரிகள் B.Ed, M.Ed உள்ளிட்ட கல்வியியல் படிப்புகளில் புதிதாக மாணவர் சேர்க்கையை மேற்கொள்ள தடைவிதிக்கப்பட்டுள்ளது.
அக்கல்லூரிகளின் பட்டியலை வெளியிட்டுள்ள ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகம், மாணவர்கள் யாரும் அவற்றில் சேர வேண்டாம் என அறிவுறுத்தியுள்ளது. மீறிச் சேர்ந்தால், அதற்குப் பல்கலைக்கழகம் பொறுப்பேற்காது எனத் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது.
இதையும் படிங்க: உயர் கல்வி நிலையங்களில் மாணவிகளின் பாதுகாப்பை உறுதி செய்ய தனிப்பிரிவு!