சின்னச்சின்ன இழை
பின்னிப் பின்னி வரும்
சித்திரை கைத்தறி சேலையடி
நம் தென்னாட்டில் எந்நாளும் கொண்டாடும் வேளையடி
- பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரனார் கைத்தறி பற்றி எழுதிய பாடல்.
இன்னும் ஒரு சில மாதங்களில் தீபாவளி சீசன் தொடங்கவுள்ளது. தீபாவளி சீசன் பிறந்தால் பட்டாசு கடைகளிலும், இனிப்பு கடைகளிலும் எந்த அளவிற்கு களைகட்டுமோ, அதையும் கடந்து களைகட்டும் இடம் துணிக் கடைகள். இளைஞர்கள் புதிய ரக துணிகளுக்காக புதுப்புது கடைகளை தேடி போகிற அளவிற்கு, தரமான கைத்தறியில் நெய்யப்பட்ட ஆடைகளுக்காக மக்கள் கோ-ஆப் டெக்ஸை நோக்கி வருகிறார்கள்.
கோ-ஆப் டெக்ஸின் சமீப கால தீபாவளி திட்டங்கள் பெரும் வெற்றியைப் பெற்றுள்ளன. இதன் பலனாக ஒவ்வொரு ஆண்டு விற்பனையிலும் கோ-ஆப் டெக்ஸின் வருவாய் உயர்ந்துகொண்டே போகிறது.
ஆனால் கடந்த காலங்களைப் போல் இந்த ஆண்டு இல்லை. கரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக தமிழ்நாட்டில் மார்ச் 25ஆம் தேதி முதல் முழு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டதால், அனைத்து தொழில்களும் முடங்கிப் போனதுடன், அனைத்து உற்பத்தி பணிகளும் நிறுத்தப்பட்டன. இதனால் ஏராளமான தொழிலாளர்கள் பெரும் பொருளாதார பாதிப்பைச் சந்தித்தனர்.
கோ-ஆப்டெக்ஸ் (Co-optex) நிறுவனமும் மூடப்பட்டிருந்தது. ஆனால் இந்த நேரத்தை நன்றாக பயன்படுத்தி இந்த ஆண்டு விற்பனையை 300 கோடி ரூபாய் அளவிற்கு உயர்த்த அந்நிறுவனம் திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.
கோ-ஆப் டெக்ஸ்:
தமிழ்நாடு கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்கம் (Tamil Nadu Handloom Weavers' Cooperative Society) என்பது தமிழ்நாட்டில் உள்ள பாரம்பரிய கைத்தறி நெசவாளர்களை ஒருங்கிணைக்கும் கூட்டுறவு அமைப்பாகும்.
கைத்தறித் துணிகளின் விற்பனையைப் பெருக்கவும், சந்தையில் பிற நிறுவனங்களினால் ஏற்படக்கூடிய போட்டியைச் சமாளிப்பதற்கும், உற்பத்தியில் புதுப்புது வகைகளை அறிமுகம் செய்வதற்கும் ஏற்படுத்தப்பட்ட அரசு நிறுவனம்தான் கோ - ஆப் டெக்ஸ்.
தமிழ்நாடு அரசின் கைத்தறி, துணிநூல், காதி, கிராமத்தொழில் மற்றும் கைவினைப் பொருள்கள் துறையினால் (Department of Handlooms, Handicrafts, Textiles and Khadi) இந்த அமைப்பு நிர்வகிக்கப்பட்டு வருகிறது. இதற்குச் சொந்தமான விற்பனை மையங்கள் தமிழ்நாட்டின் பல ஊர்களிலும் அமைக்கப்பட்டுள்ளன. இதற்கான இணையதள முகவரியில் www.cooptex.com ஆடைகளை ஆன்லைன் மூலம் வாங்கிக் கொள்ளும் வசதி மேற்கொள்ளப்பட்டுள்ளது.
தமிழ்நாடு முழுவதும் 116 கோ-ஆப் டெக்ஸ் கடைகள் உள்ளன. அதில் சென்னையில் 15 கடைகளும், வெளிமாவட்டங்களில் 38 கடைகளும் செயல்பட்டு வருகின்றன. மொத்தம் 154 கடைகள் கோ-ஆப் டெக்ஸின் கீழ் செயல்பட்டு வருகின்றன.
85 ஆண்டுகளுக்கு மேலாக செயல்பட்டு வரும் இந்த கோ-ஆப் டெக்ஸ் நிறுவனம், வாடிக்கையாளர்களின் ரசனைக்கு ஏற்றவாறு தன்னை தகவமைத்துக் கொள்ளும் வல்லமை பெற்றுள்ளது. 2018ஆம் ஆண்டு கோ-ஆப் டெக்ஸால் கொண்டு வரப்பட்ட கனவு நனவு திட்டம் இன்றளவும் வாடிக்கையாளர்களிடம் பிரபலம்.
வாடிக்கையாளர்கள் ரூ.300 முதல் ரூ.5 ஆயிரம் வரை 11 மாதம் செலுத்தி வந்தால், 12ஆவது மாதத்தின் தவணையை கோ-ஆப் டெக்ஸ் கட்டுவதோடு, கூடுதலாக கைத்தறி மற்றும் பட்டு ரகங்களை வாங்கிக் கொள்ளும் சலுகையை அளிக்கிறது. இது வாடிக்கையாளர்களுக்கு மிகவும் உபயோகமாக இருந்து வருகிறது.
இப்படி கோ-ஆப் டெக்ஸ் என்றதும் எண்ணற்ற திட்டங்கள் நினைவுக்கு வரும் நிலையில், நெசவாளர்களின் பணியையும் வாழ்வியலையும் தெரிந்துகொள்ளும் வகையில் கோ-ஆப் டெக்ஸ் நிறுவனம் சார்பாக நெசவாளர்களை காக்கும் ஆக்கபூர்வமான ஏற்பாடு ஒன்று செய்யப்பட்டுள்ளது.
சென்னை எழும்பூரில் உள்ள கோ-ஆப் டெக்ஸ் நிறுவனம் சார்பாக ஒவ்வொரு மாவட்டத்தில் உள்ள நெசவாளர்கள் சங்கத்திற்கும் பொருளாதார உதவியாக டெபாசிட் பணம் வழங்கப்பட்டுள்ளது. இதன்மூலம் கரோனா காலத்தில் நெசவாளர்கள் சிரமப்படாமல் தடுக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
ஆனால் கரோனா வைரஸ் காலத்தில் எப்படி கோ-ஆப் டெக்ஸ் நிறுவனம் வெற்றிகரமாக செயல்பட்டது என்பதுதான் ஆச்சரியமாக உள்ளது.
தீபாவளி பண்டிகைகளுக்காக நெசவாளர்களுக்கு கொடுக்கப்படும் ஆர்டர்களை கரோனா காலகட்டத்திலேயே கோ-ஆப் டெக்ஸ் நிறுவனம் கொடுத்து, மீண்டும் வாங்கியுள்ளது. இவ்வாறு வாங்கப்பட்டதை அந்தந்த மாவட்டங்களில் உள்ள தங்களது கடைகளில் ஸ்டாக்கில் வைத்து, தீபாவளி பண்டிகையின்போது விற்பனை செய்ய திட்டமிட்டுள்ளது.
அதேபோல் ஆன் லைன் மூலம் துணிகள், போர்வைகள், பட்டுப் புடவைகள் ஆகியவற்றை வாங்குவோரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதால், கோ-ஆப் டெக்ஸின் விற்பனையும் அதிகரித்துள்ளது என்கின்றனர்.