சென்னை: காஞ்சிபுரம் பட்டு சேலை வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு, சரிகையில் உள்ள தங்கம் & வெள்ளி அளவீடுகள் மற்றும் நம்பகத் தன்மையை உறுதி செய்யும் வகையில் இந்தியாவிலேயே முதன்முதலாக கோ-ஆப்டெக்ஸ் நிறுவனத்தின் சரிகை உத்தரவாதத்திற்கான அட்டையினை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமைச் செயலகத்தில் அறிமுகப்படுத்தினார்.
குழந்தைகளுக்கான ஆர்கானிக் ஆடைகள்
சுற்றுச்சூழலுக்கு உகந்த மென்மையான, இயற்கை பருத்தி நூலினை உபயோகித்து பச்சிளம் குழந்தைகளுக்கான புதிய ஆர்கானிக் ஆடை இரகங்களையும் முதலமைச்சர் அறிமுகப்படுத்தினார்.
ஆதிரை கலெக்சன்ஸ் பட்டு புடவைகள்
தமிழ்நாடு கதர் கிராமத் தொழில் வாரியத்தின், புதிய முயற்சியாக இந்தாண்டு பெண்களைக் கவரும் வகையில், ஆதிரை கலெக்சன்ஸ் வகையான அச்சிடப்பட்டப் பட்டு புடவைகள், டிஜிட்டல் பிரிண்டிங் பட்டுபுடவைகள், கையினால் வர்ணம் தீட்டப்பட்ட பட்டு புடவைகள், மற்றும் மெல்லிய ரக பருத்தி இழை புடவைகள் ஆகியவையும் அறிமுகம் செய்யப்பட்டன.
குளியல் சோப்புகள்
நவீன காலத்திற்கேற்ப, சந்தையில் உள்ள பிற சோப்புகளுக்கு இணையாக ரோஸ், லேவண்டர், சந்தனம் மற்றும் செஞ்சந்தனம் எனும் 4 வகையான நறுமணங்களில் 125 கிராம் அளவுகளில் மக்கள் விரும்பும் வகையில்; வாரிய கதர் அங்காடிகள் மற்றும் சந்தையில் பிரபலமான பல்பொருள் அங்காடிகளின் மூலம் விற்பனை செய்யும் திட்டத்தை முதலமைச்சர் தொடங்கி வைத்தார்.
தேன் விற்பனை
உணவு மற்றும் பாதுகாப்புத் துறையின் அறிவுரைப்படி, கண்ணாடி பாட்டில்களில் தேனை அதன்பண்புகள் மாறாமல் நவீன கண்ணாடி பாட்டில்களில் அடைத்து, 250 கிராம் மற்றும் 500 கிராம் என்று சந்தையில் பிரபலமான பல்பொருள் அங்காடிகளின் மூலம் காதி தேனை விற்பனை செய்யும் பணிகளையும் தமிழ்நாடு முதலமைச்சர் தொடங்கி வைத்தார்.
இதையும் படிங்க: தமிழ்நாட்டில் கூடுதல் தளர்வுகள்; முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் ஆலோசனை