சென்னை: கரோனா காலத்தில் சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமம் (சிஎம்டிஏ) பொதுமக்கள், கட்டட உரிமையாளர்களின் ஆயிரக்கணக்கான ஆன்லைன் விண்ணப்பங்கள் பரிசீலனை செய்யாமல் கிடப்பில் போடப்பட்டிருந்தது.
இது கட்டடம், புதிதாக வீடு கட்ட தொடங்கியவர்களின் மத்தியில் அதிருப்தியை உண்டாக்கியது. எனினும், சென்னையையும், அதனைச் சுற்றியுள்ள மாவட்டங்களில் ஊரடங்கு பெரிதளவுக்குத் தளர்த்தப்பட்டதால் சிஎம்டிஏ அலுவலர்கள் விண்ணப்பங்களைப் பரிசீலித்து ஆய்வுசெய்து குறிப்பிட்ட உரிமையாளர்களுக்கு மட்டும் அனுமதி வழங்கப்படுவதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
இதனால் வீடு கட்ட மற்றும் கட்டடங்களிலிருந்து மறுபடியும் ஒரு சில தளங்களை உயர்த்த அனுமதி கோரிய, சுமார் ஏழாயிரம் விண்ணப்பங்களை ஜூலை மாதத்திற்குள் முடிக்கப்பட வேண்டும் என்று அலுவலர்களுக்கு உத்தரவிட்டிருப்பதாக சிஎம்டிஏ வட்டாரங்களில் பேசப்படுகிறது.
அனுமதிக்காக காத்திருக்கும் மக்கள்
இது குறித்து பேசிய தென்னிந்திய கட்டுமான நிறுவனங்கள் சங்கத்தின் துணைத் தலைவர் ராமபிரபு, "தற்போது உள்ள சூழ்நிலையில் பொதுமக்கள் சொந்தமாக வீடு கட்ட வேண்டும் என்றாலும் வீடு கட்ட அங்கீகாரம், திட்டத்துக்கு ஒப்புதல் என நிறைய அனுமதி பெற வேண்டியிருக்கிறது.
மேலும், பொதுமக்கள், கட்டட உரிமையாளர்கள் ஏற்கனவே கட்டுமான பொருள்களின் கடும் விலையேற்றத்தினால் கவலை அடைந்துள்ளனர்.
இச்சூழலில் சி.எம்.டி.ஏ.வும் காலம் தாழ்த்தாமல் விண்ணப்பங்களைப் பரிசீலித்து அனுமதி வழங்கிட வேண்டும். தமிழ்நாட்டின் பிற பகுதிகளிலும் நகரத்திட்ட இயக்ககம் (டிடிசிபி) விண்ணப்பத்தை ஆய்வுசெய்த பின் அனுமதி கொடுக்க வேண்டும்" என்று கூறினார்.
புது வீடு கட்ட அச்சப்படும் மக்கள்
தமிழ்நாடு கட்டுமான பொறியாளர்கள், ஒப்பந்தக்காரர்கள் சங்கத்தின் தலைவர், என். கோவிந்தசாமி, கூறுகையில் "கட்டுமான பொருள்களின் விலை அதிகரித்துள்ளதால், மக்கள் புதிதாக வீடுகள் கட்ட அஞ்சுகிறார்கள்.
தமிழ்நாட்டின் பொருளாதார வல்லுநர் குழு உணர்த்தும் செய்தி என்ன?
இந்த நேரத்தில் ஏற்கனவே ஆன்லைன் மூலம் தளவமைப்புத் திட்டம், புதிதாக வீடு கட்ட விண்ணப்பித்தவர்களுக்கு சிஎம்டிஏ உடனடியாக அவர்களின் விண்ணப்பங்களைப் பரிசீலித்து அனுமதி வழங்கிட வேண்டும்" எனக் கோரிக்கைவிடுத்தார்.
விண்ணப்பங்கள் உடனடியாக பரிசீலனை
இது குறித்து பேசிய சிஎம்டிஏ அலுவலர், "தற்போது சிஎம்டிஏ அலுவலகம் 100 விழுக்காடு பணியாளர்களுடன் செயல்படத் தொடங்கியுள்ளதால், தேங்கியுள்ள விண்ணப்பங்கள் அனைத்தும் வெகு விரைவாகப் பரிசீலிக்கப்பட்டு, ஆய்வுசெய்த பின்னர் புதிதாக வீடு கட்ட வேண்டும் என்றாலோ அல்லது ஏற்கெனவே கட்டப்பட்ட வீட்டில் கூடுதலாகக் கட்டடங்களைக் கட்டுவதாக இருந்தாலும் அதற்குத் திட்ட அனுமதி வழங்கப்படும்.
சென்னை நகரத்தில் கட்டுமான பணிகளை ஒவ்வொரு நிலையிலும் விதிமுறைப்படி வீடு ஒழுங்காகக் கட்டப்படுகிறதா எனத் தொடர்ந்து கண்காணித்துவருகிறோம்" என்று கூறினார்.
கரோனா இரண்டாவது அலை தொடங்கியதிலிருந்து கட்டுமான தொழிலும் முடங்கியிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.