கோயம்பேடு சந்தையில் வியாபாரிகள், லாரி ஓட்டுநர்கள் உள்பட 7 பேருக்கு கரோனா தீநுண்மி பாதிப்பு உறுதிசெய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து, கோயம்பேடு சந்தைக்கு பொதுமக்கள் வரத் தடைவிதிக்கப்பட்டதோடு, பழ அங்காடி, மலர் சந்தையை மாதவரம் பேருந்து நிலையத்திற்கு மாற்றி சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமம் நேற்று உத்தரவிட்டது.
ஆனால், மாதவரம் பேருந்து நிலையத்திற்கு மலர் சந்தையை மாற்றுவதில் பல்வேறு நடைமுறைச் சிக்கல்கள் உள்ளதாகவும், இதனால் தங்கள் வியாபாரம் முற்றிலுமாகப் பாதிக்கப்படும் எனவும் வியாபாரிகள் கூறுகின்றனர்.
தங்களை கோயம்பேடு தனியார் பேருந்து நிலையம் அல்லது திருமங்கலம் பேருந்து நிலையத்தில் வியாபாரம் செய்ய அனுமதிக்க வேண்டும் எனவும் அரசுக்கு அவர்கள் கோரிக்கைவைக்கின்றனர்.
இது தொடர்பாக நமது ஈடிவி பாரத்திடம் பேசிய கோயம்பேடு மலர் சந்தை வியாபார சங்கத் தலைவர் மூக்கையா, "மாதவரம் சென்று வியாபாரம் செய்வதில் பல்வேறு பிரச்னைகள் உள்ளன. தற்போது மலர் சந்தையில் வியாபாரிகள், பணி ஆள்கள், சுமைதூக்கும் தொழிலாளர்கள் என மூன்றாயிரத்திற்கும் அதிகமானோர் பணியாற்றிவருகின்றனர். இவர்கள் அனைவரும் மாதவரம் செல்வது மிகவும் கடினம்.
குரோம்பேட்டை, பல்லாவரம், பழவந்தாங்கல், ஆதம்பாக்கம் உள்ளிட்ட தெற்குப் பகுதியிலிருந்து வருபவர்கள், ஏராளமான காவல் துறை சோதனைகளைக் கடந்து வடசென்னையின் கடைசியில் உள்ள மாதவரம் வருவது சாத்தியமில்லை.
மாதவரம் சென்றால் எங்களிடம் உள்ள 10 விழுக்காடு பூ மட்டுமே விற்பனை ஆகும். மீதமுள்ள பூவை என்ன செய்வது? இதனால் ஊரடங்கு முடியும் 3ஆம் தேதிவரை கடைகளை அடைக்க முடிவுசெய்துள்ளோம்" என்றார்.
ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டதிலிருந்து அதிகம் பாதிக்கப்பட்ட தொழில்களில் ஒன்று மலர் வியாபாரம். பல இடங்களில் விவசாயிகள் மலர்களைப் பறிக்காமல் செடிகளிலேயே விட்டுவிட்டனர். இன்னும் பல இடங்களில் பூவை சந்தைக்கு கொண்டுவருவதில் பிரச்னை உள்ளது.
போக்குவரத்து வசதி இல்லாதது, காவல் துறை கட்டுப்பாடுகள் ஆகியவையும் இதற்குத் தடையாக உள்ளன. மேலும், வேலையிழப்பு, வருவாய் குறைவு காரணமாக ஏராளமான மக்கள், பூ வாங்குவதைத் தேவையற்ற செலவாகக் கருதுகின்றனர். இதனால் பூ வியாபாரிகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இது தொடர்பாக மேலும் பேசிய மூக்கையா, "தற்போது கோயம்பேடு மலர் சந்தையில் 470 கடைகள் உள்ளன. அவற்றில் 170 கடைகளில் முற்றிலுமாக வியாபாரம் இல்லை. பணியாளர்களுக்கு சம்பளம் கொடுக்கும் அளவிற்குக்கூட வியாபாரம் நடைபெறவில்லை.
வழக்கமாக மார்ச், ஏப்ரல் மாதங்களில் நாள் ஒன்றுக்கு சுமார் 30 ஆயிரம் ரூபாய்க்கு வியாபாரம் நடைபெறும். தற்போது அதில் பாதி அளவுக்குக்கூட நடைபெறவில்லை. சந்தையை மாற்றக்கூறும் அரசின் உத்தரவால் நாங்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளோம்" என்று கூறினார்.
பூ சந்தையை கோயம்பேடு சந்தை வளாகத்தில் அனுமதிப்பதில் உள்ள சிக்கல் ஏராளமான சில்லறை வியாபாரிகள் அங்கு வருவதுதான். குட்டி யானை என்று அழைக்கப்படும் சிறிய ரக சரக்கு வாகனத்தில் வந்து பொருள்களை வாங்கிச் செல்லும் மொத்த வியாபாரிகளுக்கு மட்டும் அனுமதி வழங்கப்படும் எனப் பெருநகர வளர்ச்சிக் குழுமம் தெரிவித்துள்ளது.
ஆனால், காய்கறிச் சந்தையைப் போல மலர் சந்தையை வகைப்படுத்த முடியாது எனக் கூறுகின்றனர் வியாபாரிகள்.
பூ சந்தைக்கு வரும் வியாபாரிகளில் 50 விழுக்காட்டினர் இருசக்கர வாகனத்தில் வருபவர்கள்தான். வியாபாரிகள் பலரும் 100 கிலோ பூவை இருசக்கர வாகனத்தில் சுமந்து செல்வர். ஆட்டோ, பேருந்துகளில் தலா 15 விழுக்காடு வியாபாரிகள் வருவார்கள்.
பேருந்துகள் இயக்கப்படாததால் நெற்குன்றம், மேட்டுக்குப்பம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள வியாபாரிகள் நடந்தே வருகிறார்கள். ஆனால் குட்டியானையில் வரும் வியாபாரிகளுக்கு மட்டும் அனுமதி என்பதை எப்படி ஏற்க முடியும் என வியாபாரிகள் கேள்வி எழுப்புகின்றனர்.
இதையும் படிங்க: தகுந்த இடைவெளியைக் கடைப்பிடிக்காததால் நோய்த்தொற்று அதிகரிப்பு - முதலமைச்சர் கவலை