தமிழ்நாட்டில் கரோனா வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் தீவிரமடைந்து வருகிறது. குறிப்பாக இதன் தாக்கம் சென்னையில் விஸ்வரூபம் எடுத்துள்ளது. இதனைக்கட்டுப்படுத்தும் நோக்கில் மாநில அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டுவருகிறது.
இந்த பேரிடர் காலத்தில், மருத்துவர்கள், செவிலியர்கள் உள்ளிட்ட சுகாதாரத் துறையினரின் பங்களிப்பு அளப்பரியது. கரோனா தடுப்பு பணியில் மருத்துவர்கள், செவிலியர்கள் தங்களது உயிரை துட்சம் என நினைத்து அயராது உழைத்து வருகின்றனர். இதனைக் கருத்தில்கொண்டு மருத்துவர்கள், செவிலியர்களின் பணி ஓய்வுகாலத்தை நீட்டித்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டது. அதுமட்டுமின்றி கரோனா பேரிடர் காலத்தில் அயராது உழைத்துவரும் மருத்துத் துறையினருக்கு தமிழ்நாடு சார்பில் ஊக்கத் தொகை அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில், ஊரடங்கு தொடங்கியதிலிருந்து ஒருநாள்கூட விடுப்பு எடுக்காமல் குழந்தைகளுக்கு டயாலிசிஸ் சிகிச்சை அளித்துவரும் எழும்பூர் குழந்தைகள் மருத்துவமனை மருத்துவர் தம்பிதுரையின் அர்ப்பணிப்பை பாராட்டி முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக ட்வீட் செய்துள்ள முதலமைச்சர், பேரிடர் காலத்தில் விடுப்பின்றி அயராது உழைத்துவரும் மருத்துவர் தம்பிதுரையின் அர்ப்பணிப்புக்கு தலை வணங்குகிறேன். உங்கள் உடல்நலனையும் கவனித்து கொள்ளுமாறு அன்போடு கேட்டுக் கொள்கிறேன் என பதிவிட்டுள்ளார்.