சென்னை: தமிழ்நாட்டில் வருகிற 25ஆம் தேதிமுதல் மீண்டும் கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்ததையடுத்து, ஸ்டாலின் தலைமையில் அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடன் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் ஸ்டாலின் மாவட்ட ஆட்சியர்களுக்குப் பல்வேறு ஆலோசனைகள் வழங்கினார்.
குறிப்பாக, கனமழையின்போது கூடுதல் கவனம் செலுத்தி, பருவ கால சவால்களைத் திறம்படக் கையாள மாவட்ட நிர்வாகம் தயார் நிலையில் இருக்க வேண்டும், நீர்நிலை உள்கட்டமைப்புகளான கால்வாய்கள், அணைக்கட்டுகளின் கதவுகள், கரைகளைக் கண்காணித்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டும், பொதுமக்கள் பாதிக்காத வகையில் நடவடிக்கைகளைத் துரிதப்படுத்த வேண்டும் உள்ளிட்டவை குறித்து அறிவுறுத்தப்பட்டது.
சென்னை தலைமைச் செயலகத்திலிருந்து காணொலிக் காட்சி வாயிலாக நடைபெற்ற ஆலோசனையில் தலைமைச்செயலர் இறையன்பு, துறை சார்ந்த செயலர்கள் உள்ளிட்ட தமிழ்நாடு அரசின் உயர் அலுவலர்கள் பங்கேற்றனர்.
இதையும் படிங்க:திருச்சி காவல் ஆய்வாளர் குடும்பத்திற்கு ஒரு கோடி ரூபாய் நிதி