சென்னை: இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு, தமிழ்நாடு அரசின் சார்பில் உதவிகளை மேற்கொள்ள சட்டமன்றத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்த வாரம் தீர்மானம் கொண்டு வந்தார். சுமார் 80 கோடி ரூபாய் மதிப்பிலான 40 ஆயிரம் டன் அரிசி, 28 கோடி ரூபாய் மதப்பிலான உயிர் காக்கக்கூடிய 137 மருந்துப் பொருள்கள்; குழந்தைகளுக்கு வழங்க 500 டன் பால்பவுடர் உள்ளிட்டவை இலங்கை அரசுக்கு வழங்க சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இதைத் தொடர்ந்து, மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர், தமிழ்நாடு அரசு இலங்கைக்கு உதவ மத்திய அரசு அனுமதி வழங்குகிறது என கடிதம் மூலம் தெரிவித்திருந்தார். இதனையடுத்து, முதலமைச்சர் ஸ்டாலின், வெளியுறவுத் துறை அமைச்சருக்கு கடிதம் மூலம் நன்றி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து முதலமைச்சர் எழுதிய கடிதத்தில், ’இலங்கை மக்களுக்கு உதவ வேண்டும் என்ற தமிழ்நாட்டின் கோரிக்கையை ஏற்றுக்கொண்டதற்காக ஒன்றிய வெளியுறவுத்துறை அமைச்சர் டாக்டர் எஸ். ஜெய்சங்கர் அவர்களுக்கு தனிப்பட்ட முறையில் என் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். இந்த மனிதாபிமான செய்கை அனைவராலும் பெரிதும் வரவேற்கப்படும் மற்றும் நாடுகளுக்கு இடையே புரிதல் மற்றும் நல்லுறவை மேம்படுத்த உதவும் என்று நான் உறுதியாக நம்புகிறேன். அனைத்துத் துறைகளிலும் நல்லெண்ணம் வளரட்டும்’ எனத் தெரிவித்துள்ளார்.