கரோனா நோய்த் தடுப்பு, நிவாரணப் பணிகளுக்காக, முதலமைச்சர் பொது நிவாரண நிதிக்கு நிதி வழங்குவீர் என்று முதலமைச்சர் ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்திருந்தார். இவரின் கோரிக்கைக்கு இணங்க பல்வேறு தரப்பினர் நிதி வழங்கி வருகின்றனர்.
குறிப்பாக பள்ளி மாணவர்கள் பலரும் மிகவும் ஆர்வத்துடன் கரோனா நிவாரண நிதி வழங்க முன்வருகின்றனர். தாங்கள் உண்டியலில் சேமித்து வைத்த பணத்தை பெற்றோரின் மூலமாக பணமாகவோ, காசோலையகாவோ முதலமைச்சர் அலுவலகத்திற்கு அனுப்பிவைக்கின்றனர்.
கடந்த சில நாள்களுக்கு முன்பு மதுரையைச் சேர்ந்த சிறுவன் ஹரிஷ் வர்மன் தான் சைக்கிள் வாங்க சேமித்து வைத்த ஆயிரம் ரூபாயை முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு அனுப்பி வைத்தான்.
இந்த தகவலறிந்து முதலமைச்சர் சிறுவனுக்கு சைக்கிள் வாங்கி கொடுத்து அவருடன் கைப்பேசி வாயிலாக பேசினார். இது தொடர்பான வீடியோ வைரலானது. இதையடுத்து பலரும் கரோனா நிவாரண நிதி வழங்கினார்.
இந்நிலையில் முதலமைச்சர் ஸ்டாலின் கரோனா நிதி அளித்த பள்ளி மாணவர்களுக்கு நன்றி தெரிவித்து ட்வீட் செய்துள்ளார். அந்த பதிவில், "தங்களின் சின்னஞ்சிறு கனவுகளுக்காக சிறுகச் சேமித்ததையும் கரோனா நிதிக்கு வழங்கிடும் பிஞ்சு உள்ளங்களின் பெருங்கருணை நெஞ்சத்தை நெகிழ வைக்கிறது! தமிழ் மண்ணில் அறம் தழைக்கட்டும்! பிள்ளைச்செல்வங்களுக்கு திருக்குறள் நூலொன்று அன்புடன் அனுப்பி வைக்கப்படும்!" என்று தெரிவித்துள்ளார்.