சென்னை உயர் நீதிமன்ற வளாகத்தில் நீதிமன்றக் கட்டடங்களுக்கான அடிக்கல் நாட்டுதல், திறப்பு விழா உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றது. இதில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், உச்ச நீதிமன்ற தலைமை என்.வி.ரமணா கலந்து கொண்டனர். அப்போது பேசிய ஸ்டாலின், "முதலமைச்சராக முதல் முறையாக உயர் நீதிமன்ற வளாகத்தில் நடக்கும் விழாவில் கலந்து கொள்கிறேன்.
நீதி நெறியை பின்பற்றி ஆட்சியை நடத்திக் கொண்டிருக்கிறேன். உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரமணா, சட்டத்தின் குரலாக மட்டுமல்லாமல் மக்களின் குரலாகவும் விளங்குகிறார். கடந்தாண்டு 64 கீழமை நீதிபதிகள் நியமனம், வணிக வழக்குகளை விசாரிக்கும் நீதிமன்றங்கள் தொடக்கம், திருவண்ணாமலை, திருவாரூர் மாவட்டங்களில் சார்பு நீதிமன்றங்கள் தொடக்கம். சென்னை உயர் நீதிமன்ற வளாகத்தில் 20.24 கோடி ரூபாயில் புதிய கட்டடம் உள்ளிட்டவைக்காக எனது நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.
உச்ச நீதிமன்ற, உயர் நீதிமன்ற நீதிபதிகள் நியமனம் சமூக நீதியை உறுதி செய்யும் வகையில் இருக்க வேண்டும் என்று கோரிக்கை வைக்கிறேன். அதேபோல தென்மாநில மக்களின் நீண்ட கால கோரிக்கையான உச்ச நீதிமன்ற கிளையை தமிழ்நாட்டில் அமைக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொள்கிறேன். குறிப்பாக வழக்காடு மொழியாக தமிழை அறிவிக்க வேண்டும் என்றும் கோரிக்கை வைக்கிறேன்" என்றார்.
இதையடுத்து பேசிய என்.வி.ரமணா, "தமிழர்கள் மொழி பெருமை மிக்கவர்கள். மொழிக்காக எப்போதும் முதலாவதாக நிற்பார்கள். இந்திய அரசியல் சாசன வரைவு பணியில் ஏராளமான தமிழர்கள் பங்கேற்றுள்ளனர். சென்னையை சேர்ந்த வழக்கறிஞர்கள் நீதித்துறையை வலுப்படுத்தும் பணிகளில் முக்கிய பங்குவகின்றனர்.
நீதிபதிகள் அரசியல் சாசன கடமையை நிறைவேற்றுவது சுமையான பணி. அதை சிறப்பாக செய்து வருகிறோம். ஆக்கப்பூர்வமான தீர்வுகளை காண வேண்டிய சூழலில் நீதிபதிகள் சட்டத்தை மட்டும் சார்ந்திருக்க முடியாது. சமூக உண்மையை நீதிபதிகள் உணர்ந்திருக்க வேண்டும். மக்கள் உடனடி நீதியை எதிர்பார்க்கின்றனர். அது நீதியை கொன்று விடுகிறது.
நீதிமன்றங்களில் வழக்குகள் எண்ணிக்கைக்கு ஏற்ப உள்கட்டமைப்பு வசதிகள் அதிகரிக்க வேண்டும். நீதிமன்றத்தில் உள்ளூர் மொழிகளை பயன்படுத்துவதில் சில நடைமுறை சிக்கல்கள் உள்ளன. நீதிபதியாக வர பகுதி, இனம், மொழி உள்ளிட்ட எவையும் தடையாக இருக்க கூடாது" என்றார்.
இதையும் படிங்க:வழக்கு தொடுப்பவரின் பாவங்களை வழக்கறிஞர் சுமக்க மாட்டார் - நீதிபதி சுவாமிநாதன்