சென்னை: ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் செயல்பாடுகள், துறை மூலம் மேற்கொள்ளப்படும் பல்வேறு திட்டப்பணிகளின் முன்னேற்றம், புதிதாக செயல்படுத்த உத்தேசிக்கப்பட்டுள்ள திட்டங்கள் ஆகியவை குறித்து தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நேற்று (ஜூலை 8) தலைமைச் செயலகத்தில் ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது.
இக்கூட்டத்தில், தமிழ்நாட்டில் உள்ள அனைத்து ஊரகப் பகுதிகளிலும் மக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் எவ்வித குறைபாடுமின்றி முழுமையாக கிடைக்க செய்ய வேண்டும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தினார்.
கூட்டத்தில் நடைபெற்ற ஆய்வுகள்
மூன்றடுக்கு ஊராட்சிகளின் செயல்பாடுகள், கிராம ஊராட்சிகளால் செயல்படுத்தப்படும் குடிநீர் விநியோகத் திட்டங்கள், தெரு விளக்குகள் பராமரிப்பு, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் மூலம் நிறைவேற்றப்படும் அடிப்படை வசதிகளுக்கான திட்டங்கள், ஜல் ஜீவன் மிஷன், பிரதம மந்திரி ஊரக குடியிருப்புத் திட்டம், ஊரகத் தூய்மை பாரத இயக்கம், சட்டப்பேரவை உறுப்பினர் தொகுதி மேம்பாட்டுத் திட்டம் போன்ற திட்டங்கள் குறித்து ஆய்வு செய்யப்பட்டது.
மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின்கீழ் வேலை கோரும் பணியாளர்களுக்கு முறையாக வேலை வழங்குவது, வேலைக்கான ஊதியத்தினை குறித்த நேரத்தில் வழங்குவது, திட்ட செயலாக்கத்தில் தகவல் தொழில்நுட்பத்தின் பயன்பாடு, ஊரகப் பகுதிகளில் இத்திட்டத்தின்கீழ் மேற்கொள்ளப்படும் உட்கட்டமைப்பு வசதிகள் ஆகியவை குறித்து விவாதிக்கப்பட்டது.
மேலும், இத்திட்டத்தின்கீழ் செயல்படுத்தப்படும் அங்கன்வாடி மையங்கள் கட்டுதல், கிராம ஊராட்சி அலுவலகக் கட்டடங்கள், பள்ளிச் சுற்றுச்சுவர் கட்டுதல், சிமெண்ட் கான்க்ரீட், பேவர் பிளாக், இதர சாலைப் பணிகளின் முன்னேற்றம் குறித்தும், எதிர்காலத்தில் மேற்கொள்ளப்படவுள்ள பணிகள் குறித்தும், இத்திட்டத்தின்கீழ் பிற துறைகளை ஒருங்கிணைத்து மேற்கொள்ளப்படவேண்டிய பணிகள் குறித்தும் முதலமைச்சர் ஆய்வு மேற்கொண்டார்.
சாலைகள் குறித்து ஆலோசனை
ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை மூலம் செயல்படுத்தப்படும் ஊரக சாலைகள் மற்றும் உட்கட்டமைப்புத் திட்டங்களான பிரதம மந்தரி கிராம சாலைகள் திட்டம், நபார்டு உட்கட்டமைப்பு வளர்ச்சி நிதி திட்டங்கள், தமிழ்நாடு சாலைகள் மேம்பாட்டுத்திட்டம், ஒருங்கிணைந்த ஒப்படைக்கப்பட்ட வருவாய்த் திட்டம் ஆகிய திட்டங்களின் முன்னேற்றம் குறித்து ஆய்வு செய்யப்பட்டது.
மேலும், தேவைப்படும் இடங்களில் பாலங்கள் கட்டுதல், சாலைகள் அமைக்கும் திட்டங்களை வருங்காலங்களில் செயல்படுத்துவது குறித்தும் ஆலோசிக்கப்பட்டது.
சமத்துவபுரங்களை பழுதுபார்த்தல்
மேலும், ஊரகப் பகுதியிலுள்ள நீர்நிலைகளை புனரமைப்பு செய்தல், ஏற்கனவே கட்டப்பட்ட சமத்துவபுரங்களை பழுதுபார்த்து சீரமைத்தல், புதிய சமத்துவபுரங்களை உருவாக்குதல், ஊரக உட்கட்டமைப்புகளை மேம்படுத்துதல் குறித்தும், ஊராட்சிகளில் மின் ஆளுமையின் மூலம் சேவைகளை மேம்படுத்துதல், பணிகள் மற்றும் நிதி பயன்பாடு ஆகியவற்றை மின் ஆளுமை மூலம் கண்காணித்தல் குறித்தும் ஆய்வு செய்யப்பட்டது.
தற்சார்பு கிராமங்களை உருவாக்குவோம்
தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனம் மூலம் செயல்படுத்தப்படும் பல்வேறு வாழ்வாதார திட்டங்களான, தமிழ்நாடு ஊரக வாழ்வாதார இயக்கம், தமிழ்நாடு நகர்புற வாழ்வாதார இயக்கம், தமிழ்நாடு ஊரக புத்தாக்கத் திட்டம், திறன் மேம்பாட்டுத் திட்டம், பயிற்சித் திட்டங்கள் குறித்தும், சுய உதவிக்குழுக்கள் மூலம் ஊரக வாழ்வாதார மேம்பாடு குறித்தும், பல்வேறு திட்டப் பணிகளை ஒருங்கிணைத்து, வாழ்வாதார திட்ட செயல்பாடுகள் மூலம் தற்சார்பு பெற்ற கிராமங்களை உருவாக்க வேண்டுமென்றும் முதலமைச்சர் அறிவுரை வழங்கினார்.
கூட்டத்தில் பங்கேற்றோர்
இந்தக் கூட்டத்தில், ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் கே. ஆர். பெரியகருப்பன், தலைமைச் செயலாளர் வெ. இறையன்பு, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி தலைமை இயக்குநர் (பயிற்சி) / கூடுதல் தலைமைச் செயலாளர் ஜெயஸ்ரீ ரகுநந்தன், நிதித்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் ச. கிருஷ்ணன், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை முதன்மைச் செயலாளர் கே. கோபால், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி இயக்குனர் பிரவீன் பி. நாயர், அரசு உயர் அலுவலர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
இதையும் படிங்க: தமிழ்நாடு உயர்கல்வி மன்றம்: துணைத் தலைவராக அ.ராமசாமி நியமனம்!