கரோனா தடுப்புப் பணிகளை மாவட்டம் வாரியாக ஆய்வு செய்து பல்வேறு வளர்ச்சித் திட்டங்களுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் பழனிசாமி அடிக்கல் நாட்டி வருகிறார். அந்த வகையில், குமரி மாவட்டத்தில் கரோனா தடுப்பு பணி மற்றும் வளர்ச்சிப் பணிகள் தொடர்பாக இன்று (நவம்பர் 10) ஆய்வு மேற்கொண்டு வருகிறார்.
முன்னதாக, ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள ஜெயலலிதா உருவ படத்துக்கு முதலமைச்சர் பழனிசாமி, அமைச்சர் கடம்பூர் ராஜு ஆகியோர் மலர் தூவி மரியாதை செலுத்தினர். இதைத் தொடர்ந்து நடைபெற்ற விழாவில், பொதுப்பணி துறை, ஊரக வளர்ச்சித்துறை, ஊராட்சித் துறை, நகராட்சி நிர்வாகம், குடிநீர் வழங்கல் துறை போக்குவரத்துத் துறை ஆகியவற்றின் சார்பில் ரூ. 60.44 கோடி மதிப்பிலான 36 புதிய திட்டங்களுக்கு முதலமைச்சர் அடிக்கல் நாட்டினார்.
மேலும் நகராட்சி நிர்வாகம், குடிநீர் வழங்கல் துறை, நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை, மக்கள் நல்வாழ்வுத் துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளின் கீழ், ரூ. 153. 92 கோடி மதிப்பீட்டில் முடிக்கப்பட்ட 21 பணிகளை திறந்து வைத்த முதலமைச்சர் பழனிசாமி, பல்வேறு துறைகளின் சார்பில் ரூ. 54.22 கோடி செலவில் 2736 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளையும் வழங்கினார்.
இந்த விழாவில் மொத்தம் ரூ. 268.58 கோடி மதிப்பிலான திட்ட பணிகளை திறந்து வைத்தும், புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார். இதைத் தொடர்ந்து, குமரி மாவட்டத்தில் செயல்படுத்த உள்ள பல்வேறு வளர்ச்சித் திட்டப் பணிகள், தடுப்பு பணிகள் குறித்து அனைத்து துறை முதன்மை அலுவலர்களுடன் ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் முதலமைச்சர் ஆய்வு மேற்கொண்டார்.