மதுரை: கரோனா தொற்றில் இருந்து நாட்டை பாதுகாக்க அனைவரும் கரோனா தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டும் என, முதலமைச்சர் பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.
தமிழ்நாட்டில் கரோனா தடுப்பூசி செலுத்தும் திட்டத்தை, மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையில் முதலமைச்சர் பழனிசாமி இன்று (ஜனவரி 16) தொடக்கி வைத்து, அது தொடர்பான பணிகளை பார்வையிட்டார். அவருடன் துணை முதலமைச்சர் ஓ. பன்னீர் செல்வம், சுகாதாராத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், அந்த துறையின் செயலர் ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
முதல் தடுப்பு ஊசியை தமிழ்நாடு மெடிக்கல் கவுன்சில் தலைவர் மருத்துவர் செந்தில் செலுத்திக் கொண்டார். ஒவ்வொரு மையத்தில் நாள் ஒன்றுக்கு 100 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்படும் நிலையில், மதுரை மாவட்டத்தில் மட்டும் எட்டாயிரம் முன்களப் பணியாளர்களுக்கு தடுப்பூசி செலுத்த திட்டமிடப்பட்டுள்ளது.
இந்நிகழ்ச்சியில் பேசிய முதலமைச்சர் பழனிசாமி, கரோனா தடுப்பூசி என்பது இந்திய மக்கள் பாதுகாப்பாக வாழ்வதற்காக பிரதமர் நரேந்திர மோடி மேற்கொண்ட முயற்சிக்கு கிடைத்த வெற்றி என்று புகழாரம் சூட்டினார். கரோனா தடுப்பூசியை தான் நிச்சயம் செலுத்திக் கொள்வேன் என்றும், நாட்டை பாதுகாக்க அனைவரும் தடுப்பூசியை செலுத்திக் கொள்ள வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.
தமிழ்நாட்டில் அரசு எடுத்த நடவடிக்கையின் காரணமாக கரோனா தொற்றால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை 650க்கும் கீழ் குறைந்துள்ளதாக குறிப்பிட்ட முதலமைச்சர் பழனிசாமி, பொதுமக்கள் அனைவரும் விழிப்புணர்வுடன் சமூக இடைவெளியை கடைபிடித்து, முகக் கவசம் அணிந்து, கைகளை சுத்தமாக வைத்துக்கொண்டால் நோய் இல்லாத மாநிலமாக தமிழ்நாட்டை மாற்ற முடியும் என்றார்.