சென்னை: தமிழ்நாட்டில் தற்போது நடைமுறையில் உள்ள ஊரடங்கு வரும் 23ஆம் தேதியுடன் முடிவடைகிறது. இதனிடையே, மாநிலத்தின் பல்வேறு மாவட்டங்களில் கரோனா தொற்று எண்ணிக்கை கணிசமாக அதிகரித்துவருகிறது. இதனைக் கருத்தில்கொண்டு, ஊரடங்கு கட்டுப்பாடுகள் கடுமையாக்கப்படலாம் எனத் தகவல்கள் வெளியாகின.
மருத்துவ ஆலோசர்களும் ஊரடங்கு தளர்வுகள் குறைக்கப்பட வேண்டும் என்று கோரிக்கை வைத்து வருகின்றனர். இந்தச் சூழலில், முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று காலை 11 மணிக்கு சென்னை தலைமைச் செயலகத்தில், ஊரடங்கு நீட்டிப்பு குறித்து மருத்துவக் குழுவினர், உயர் அலுவலர்கள், காவலர்களுடன் ஆலோசனை நடத்த உள்ளார்.
இந்தக் கூட்டத்தின் முடிவில் ஊரடங்கு நீட்டிக்கப்படும் என்றும், கரோனா தொற்று அதிகரிக்கும் மாவட்டங்களில் வார இறுதி நாள்களில் ஊரடங்கு விதிக்கப்படும் எனவும் கூறப்படுகிறது.
அத்துடன் செப்டம்பர் 1ஆம் தேதிமுதல் 9ஆம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட உள்ளதால், அதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள், கட்டுப்பாடுகள் குறித்து இக்கூட்டத்தில் ஆலோசிக்கப்பட உள்ளது.
குறிப்பாக கரோனா பரவல் அதிகமுள்ள மாவட்டங்களில் பள்ளிகள் திறப்பது பாதுகாப்பானதா என்பது குறித்து முக்கிய முடிவெடுக்கப்படும். இதுவரை தமிழ்நாட்டில் 11 முறை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. செப்டம்பர் மாதத்தில் கரோனா தொற்றின் மூன்றாம் அலை தொடங்கும் என்று மருத்துவ வல்லுநர்கள் தெரிவித்துள்ள நிலையில், தமிழ்நாட்டில் பள்ளிகள் திறக்கப்படுவதால், கூடுதல் பாதுகாப்பு விதிமுறைகள் வேண்டும் என பெற்றோர்கள் கோரிக்கைவைத்துள்ளனர்.
இதையும் படிங்க: தமிழ்நாட்டில் கட்டுப்பாடுகளுடன் கூடிய ஊரடங்கு மேலும் இரண்டு வாரங்களுக்கு நீட்டிப்பு