சென்னை: உக்ரைன் நாட்டில் ரஷ்யா ராணுவம் புகுந்து தாக்குதல் நடத்திவருகிறது. இந்த நிலையில் அந்நாட்டில் சிக்கித் தவிக்கும் தமிழ்நாட்டைச் சேர்ந்த மாணவர்கள் மற்றும் அங்கு குடியேறியவர்களை சிறப்பு விமானம் மூலம் பாதுகாப்பாக மீட்க நடவடிக்கை எடுக்குமாறு வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.
அந்தக் கடிதத்தில், "இன்று ரஷ்ய ராணுவம் உக்ரைனுக்குள் புகுந்து தாக்குதல் நடத்திவருகிறது என்ற ஊடக செய்திகள் குறித்து வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கரின் கவனத்திற்கு கொண்டுவருகிறேன். உக்ரைன் போருக்கு இடையே தமிழ்நாட்டைச் சேர்ந்த தொழில்முறை படிப்புகளில் பயிலும் சுமார் 5,000 மாணவர்கள் மற்றும் தமிழ்நாட்டிலிருந்து குடியேறியவர்கள் உக்ரைனில் சிக்கித் தவித்துவருகின்றனர்.
அவர்களுடைய குடும்பத்தினரிடமிருந்து நூற்றுக்கணக்கான துயர அழைப்புகளை பெற்றுவருகிறேன். எனவே அவர்களை அவசரமாக உக்ரைனிலிருந்து இந்தியாவிற்கு அழைத்துவர கோரிக்கை வைக்கிறேன். குறிப்பாக இந்த விவகாரத்தை உயர்மட்ட அளவில் எடுத்துச் சென்று நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக்கொள்கிறேன். அதேபோல "வந்தேபாரத்" மிஷன் போன்ற சிறப்பு விமானங்கள் மூலம் இந்தியர்களை மீட்க ஏற்பாடு செய்ய வேண்டும்" எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: உக்ரைனில் சிக்கிய கொடைக்கானல் மாணவி?