இந்திய நாட்டின் சுதந்திரப் போராட்ட தியாகிகள் அனைவருக்கும் எனது வீர வணக்கத்தை தெரிவித்துக் கொள்கிறேன். இந்த மாட்சிமை பொருந்திய கோட்டையில், தேசியக் கொடியேற்றும் வாய்ப்பினை வழங்கிய தமிழ்நாட்டு மக்களுக்கு எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். சுதந்திர தினத்தில் முதலமைச்சர் யாரோ, அவரே தேசியக் கொடியேற்ற வேண்டும் என்ற சுதந்திரத்தை பெற்றுக்கொடுத்தவர் கலைஞர் கருணாநிதி.
இந்த நாளில், தனிப்பட்ட முறையில் எனக்கு ஏற்படும் பெருமிதம் என்னவென்றால், திமுக ஆறாவது முறையாக ஆட்சிப் பொறுப்பில் அமர்ந்திருக்கிறது என்பது. அரை நூற்றண்டுகளாக உழைத்த நான் தமிழ்நாட்டு மக்களால், முதலமைச்சராக ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளேன். சுதந்திரமடைந்து 75 ஆண்டுகள் ஆகிவிட்டன. ஆனால், அதற்கு 150 ஆண்டுகளுக்கு முன்னதாகவே சுதந்திரத்திற்காக போராடிய மண், நம் தமிழ் மண்.
நினைவுத்தூண்
அதனை போற்றும் வகையில் இந்தக் கோட்டையில், பூலித்தேவர். வேலுநாச்சியார், வீரபாண்டிய கட்டபொம்மன். தீரன் சின்னமலை, வ. உ.சிதம்பரம்பிள்ளை, சின்ன மருது, பெரிய மருது, பாரதியார், திருப்பூர் குமரன், ராஜாஜி உள்ளிட்ட தியாகிகளின் நினைவாக நினைத்தூண் அமைக்கப்பட்டுள்ளது.
அத்துடன் தமிழ்நாட்டின் சுதந்திரப் போராட்ட தியாகிகளுக்கு வழங்கும் ஒவ்வூதியத் தொகை 17 ஆயிரத்திலிருந்து 18 ஆயிரம் ரூபாயாக உயர்த்தப்படுகிறது. அதேபோல, குடும்ப ஓவ்வூதியத்தொகை 8,500 ரூபாயிலிருந்து 9,000 ரூபாயாக உயர்த்தப்படுகிறது.
அனைத்து வகையிலும் தன்னிறைவு பெற்ற நாடாக தமிழ்நாடு திகழ வேண்டும் என்று வ. உ.சிதம்பரம்பிள்ளை கனவு கொண்டார். அதே கனவைக் கொண்ட அரசு நமது திமுக அரசு. அதனை அடிப்படையாக கொண்டு, ஆட்சி செயல்படும். கரோனா தொற்று காலம் நமக்கு பாடம் புகட்டியுள்ளது. இந்த நேரத்தில் மருத்துவர்கள், துப்புரவுப் பணியாளர்கள், செவிலியர்கள், காவலர்கள் ஆகியோரின் முக்கியத்துவத்தை அறிந்துள்ளோம்.
101ஆவது நாள்
அவர்களுக்கு பாராட்டுக்கள். குறிப்பாக இன்று திமுக ஆட்சி பொறுப்பேற்று 101ஆவது நாள். இதனிடையே, தமிழ்நாடு வெள்ளையறிக்கை, நிதிநிலை அறிக்கை ஆகியவை தாக்கல் செய்யப்பட்டுள்ளன. இதன் மூலம் தமிழ்நாடு எவ்வளவு நிதிச்சுமையில் உள்ளது என்பதை அனைவரும் தெரிந்திருக்ககூடும். இத்தகைய நிதிச்சுமையில் பொறுப்பேற்றுள்ள திமுக அரசானது, கரோனாவால் பாதிக்கப்பட்ட மக்களைக் காக்க தயங்கவில்லை.
கரோனா நிவாரண நிதியாக 4,000 ரூபாய் வழங்கப்பட்டுள்ளது. 16 மளிகைப் பொருள்கள் அடங்கிய தொகுப்பு வழங்கப்பட்டுள்ளது, பால், பெட்ரோல் விலை தலா மூன்று ரூபாய் குறைக்கப்பட்டுள்ளது. பேருந்தில் பெண்கள், திருநர்கள், மாற்றுத் திறனாளிகளுக்கு இலவசப் பயணம், கோயில்களில் தமிழில் அர்ச்சனை, அனைத்து சாதியிரும் அர்ச்சகராக உரிமை உள்ளிட்டவை நிகழ்த்திக்காட்டப்பட்டுள்ளது" எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க: முதல் முறையாக கோட்டையில் கொடியேற்றுகிறார் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்