சென்னை: தமிழ்நாட்டில் நடைமுறையில் உள்ள ஊரடங்கின்படி வெள்ளி, சனி, ஞாயிற்றுக் கிழமைகளில் அனைத்து வழிபாட்டுத் தலங்களும் மூடப்பட்டிருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு பாஜக உள்பட பல்வேறு தரப்பினர் எதிர்ப்புத் தெரிவித்து, வார இறுதி நாள்களில் கோயில்களைத் திறக்க அனுமதி வழங்குமாறு கோரிக்கை-வைத்துவருகின்றனர்.
ஒன்றிய அரசின் அறிவுறுத்தலின்படியே கோயில்கள் வார இறுதி நாள்களில் மூடப்பட்டுவருகின்றன எனத் தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது. கோயம்புத்தூர் பீளமேடு பகுதியைச் சேர்ந்த ஆர். பொன்னுசாமி என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு ஒன்றைத் தாக்கல்செய்திருந்தார்.
எந்த உத்தரவையும் பிறப்பிக்காது
அதில் முன்னிலையாகியிருந்த அரசு தலைமை வழக்கறிஞர் சண்முகசுந்தரம் ஒன்றிய அரசின் வழிகாட்டு நெறிமுறைகளின்படிதான் கோயில்கள் மூடப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார். இதை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள், இது குறித்து தமிழ்நாடு அரசு முடிவு எடுக்கட்டும். நீதிமன்றம் எந்த உத்தரவையும் பிறப்பிக்காது என்று தெரிவித்தனர்.
இந்தச் சூழலில், முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று காலை 11 மணிக்கு சென்னை தலைமைச் செயலகத்தில், ஊரடங்கு நீட்டிப்பு குறித்து மருத்துவக் குழுவினர், உயர் அலுவலர்கள், காவலர்களுடன் ஆலோசனை நடத்த உள்ளார். இந்தக் கூட்டத்தில் கோயில்கள் திறப்பு குறித்து முக்கிய முடிவு எடுக்கப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
நவம்பர் 1ஆம் தேதி
மேலும், நவம்பர் 1ஆம் தேதியிலிருந்து ஒன்றாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு மாணவர்களுக்குப் பள்ளிகள் திறப்பது குறித்து ஆய்வுசெய்யப்பட்ட உள்ளது. ஏற்கனவே 9ஆம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு வரையில் பள்ளிகள் திறக்கப்பட்டு செயல்படுத்தப்பட்ட அனுபவம் கல்வித் துறை அலுவலர்களுக்கு உள்ளது. மாணவர்களுக்கான பாதுகாப்பு வழிமுறைகளைப் பின்பற்றி பள்ளிகள் திறக்க வேண்டும் எனப் பள்ளிக் கல்வித் துறை அறிவுறுத்தியுள்ளது.
இதனிடையே, மாநிலத்தின் பல்வேறு மாவட்டங்களில் கரோனா தொற்று எண்ணிக்கை கணிசமாக அதிகரித்துவருகிறது. இதனைக் கருத்தில்கொண்டு, ஊரடங்கு கட்டுப்பாடுகள் கடுமையாக்கப்படலாம் எனத் தகவல்கள் வெளியாகின.
இதையும் படிங்க: காலாண்டு, அரையாண்டு தேர்வு கிடையாது - அமைச்சர் அன்பில் பொய்யாமொழி