தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமைச் செயலகத்தில், நேற்று வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறையின் கீழ் செயல்படும், நில அளவை மற்றும் நிலவரித் திட்ட இயக்குநரகத்தில் காலியாக உள்ள 505 நில அளவர் மற்றும் 20 இளநிலை உதவியாளர் பணியிடங்களுக்கு, தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் மூலம் தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு பணி நியமன ஆணைகளை வழங்கிடும் அடையாளமாக, நான்கு நில அளவர் மற்றும் ஒரு இளநிலை உதவியாளர் ஆகியோருக்கு பணி நியமன ஆணைகளை வழங்கினார்.
நில அளவை மற்றும் நிலவரித்திட்ட இயக்குநரகம் 150 ஆண்டுகளை கடந்த தமிழ்நாடு அரசின் மிகவும் பழமையான துறைகளில் ஒன்றாகும். இத்துறையானது, நில அளவைப் பிரிவுகள், நில அளவை குறியீடு, நில ஆவணங்கள் பராமரித்தல், நில உரிமை மற்றும் பின்னர் அதில் ஏற்படும் மாற்றங்கள் ஆகியவற்றை உரிய பதிவேடுகளில் பதிவு செய்தல் போன்ற பணிகளை மேற்கொண்டு வருகிறது.
இத்தகைய முக்கியத்துவம் வாய்ந்த நில அளவை மற்றும் நிலவரித் திட்ட இயக்குநரகத்தில் பணிகள் தொய்வின்றி சீரிய முறையில் தொடர்ந்திட இத்துறையில் ஏற்படும் காலிப் பணியிடங்கள் உடனுக்குடன் நிரப்பப்பட்டு வருகின்றன.
இந்த நிகழ்வின்போது, வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர் ஆர்.பி. உதயகுமார், தலைமைச் செயலர் சண்முகம், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை கூடுதல் தலைமைச் செயலர் டாக்டர் அதுல்ய மிஸ்ரா, நில அளவை மற்றும் நிலவரித் திட்ட இயக்குநர் இரா. செல்வராஜ், அரசு உயர் அலுவலர்கள் ஆகியோர் உடனிருந்தனர்.