இதுதொடர்பாக, தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
விழுப்புரம் மாவட்டம், சிறுமதுரை கிராமத்தைச் சேர்ந்த ஜெயபால் என்பவரின் மகள், சிறுமி ஜெயஸ்ரீ என்பவர் மே.10 ஆம் தேதியன்று முருகன், கலியபெருமாள் ஆகிய இருவரால் தீ வைத்ததில் பலத்த காயம் அடைந்து, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பலனின்றி இன்று (11.5.2020) உயிரிழந்தார் என்ற செய்தி அறிந்து நான் மிகுந்த துயரமும், வேதனையும் அடைந்தேன்.
இந்தத் துயரச் சம்பவத்தில் உயிரிழந்த சிறுமி ஜெயஸ்ரீயின் குடும்பத்துக்கு, எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன். இந்த குற்றச் செயலில் ஈடுபட்டவர்கள் மீது, திருவெண்ணைநல்லூர் காவல் நிலையத்தில் கொலை வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
குற்றவாளிகள் கைது செய்யப்பட்டு, அவர்களிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இக்கொடூர செயலை நான் வன்மையாகக் கண்டிக்கிறேன். இச்செயலில் ஈடுபட்டவர்கள் மீது சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். உயிரிழந்த சிறுமி ஜெயஸ்ரீயின் குடும்பத்துக்கு முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து, 5 லட்சம் ரூபாய் வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது.
இவ்வாறு அதில் முதலமைச்சர் பழனிசாமி குறிப்பிட்டுள்ளார்.
கட்சியிலிருந்து நீக்கம் :
இதனிடையே சிறுமி கொலை குற்ற சம்பவங்களில் ஈடுபட்ட அதிமுக கட்சியின் விழுப்புரம் தெற்கு மாவட்டம், திருவெண்ணெய்நல்லூர் ஒன்றியத்தைச் சேர்ந்த கே. கலியபெருமாள், (சிறுமதுரை புதுக்காலனி கிளைக் கழகச் செயலாளர்), கே. முருகன், (சிறுமதுரை காலனி கிளைக் கழக மேலமைப்புப் பிரதிநிதி ) ஆகியோர் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பு உட்பட அனைத்துப் பொறுப்புகளில் இருந்தும் நீக்கப்பட்டனர்.
இதுதொடர்பாக, அதிமுக கட்சியின் இணை ஒருங்கிணைப்பாளரும், தமிழ்நாடு முதலமைச்சருமான எடப்பாடி கே. பழனிசாமி, மற்றும் கட்சி ஒருங்கிணைப்பாளரும், துணை முதலமைச்சருமான ஓ. பன்னீர் செல்வம் ஆகியோர் கட்சியின் சார்பில் வெளியிட்ட செய்திக்குறிப்பில், "கழகத்தின் கொள்கை குறிக்கோள்களுக்கும், கோட்பாடுகளுக்கும் முரணான வகையில், இவர்கள் இருவரும் செயல்பட்டதாலும், கழகத்தின் கண்ணியத்துக்கு மாசு ஏற்படும் வகையில் நடந்து கொண்டதாலும், கழகக் கட்டுப்பாட்டை மீறி கழகத்துக்கு களங்கமும் அவப்பெயரும் உண்டாகும் விதத்தில் செயல்பட்ட காரணத்தினாலும், அவர்கள் மீது இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கட்சி நிர்வாகிகள் யாரும் இவர்களுடன் எவ்விதத் தொடர்பும் வைத்துக் கொள்ளக் கூடாது" என அந்தச் செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளனர்.