இதுதொடர்பாக முதல்வர் பழனிச்சாமி வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில்,
பன்மொழி பேசும் மக்களும் பாரினில் ஒற்றுமையாக வாழலாம் என்பதற்கு இணங்க, தமிழகத்தில் வாழும் தெலுங்கு மற்றும் கன்னடம் பேசும் மக்கள் மொழி, கலாச்சாரம் மற்றும் பண்பாடில் வேறுபட்டு இருந்தாலும், தமிழக மக்களுடன் ஒற்றுமையுடன் வாழ்ந்து வருகிறார்கள்.
மேலும், இவர்கள் தமிழகத்தின் வளர்ச்சிக்கும், ஒற்றுமைக்கும் உறுதுணையாக இருப்பது பெருமைக்குரிய ஒன்றாகும். தமிழகத்தில் வாழும் கன்னடம் மற்றும் தெலுங்கு மக்களுக்கு இப்புத்தாண்டை முன்னிட்டு, இனிய யுகாதி வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன் எனத் தெரிவித்துள்ளார்.
இதேபோல் அமுமுக துணைப் பொதுச்செலாளர் டிடிவி தினகரனும் யுகாதி வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில்,
வசந்த காலத்தின் தொடக்கமான யுகாதி புத்தாண்டைக் கொண்டாடும் தெலுங்கு மற்றும் கன்னட மொழி பேசும் அனைவருக்கும் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் சார்பில் நெஞ்சம் நிறைந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
பல மதங்களும், இனங்களும், மொழிகளும், கலாச்சாரமும், பண்பாடும் இணைந்து உலகுக்கே ஒற்றுமையின் அடையாளமாக திகழும் தேசம் நம்முடைய இந்தியா.
அதிலும் எல்லோரையும் அரவணைப்பதில், எப்போதும் தமிழ்நாடு மற்றவர்களுக்கு வழிகாட்டியாகவே திகழ்ந்திருக்கிறது. எதைக்கொண்டும் மக்களைத் துண்டாடுவதோ, வாக்கு வங்கியாக மட்டும் வைத்து மக்களை ஏமாற்றி அரசியல் ஆதாயம் தேடுவதோ இந்த மண்ணில் நிகழவே கூடாது என்பதில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம்.
தேர்தல்கள் வரும்; போகும். ஆனால் நாம் அனைவரும் ஒற்றுமையுடனும் அமைதியுடனும் வாழ்வது முக்கியம். எனவே நம்மை அடிமைப்படுத்தி ஆண்ட ஆங்கிலேயர்களைப் போல இனி யாரும் மொழி, மதம், இனம், சாதி ஆகியவற்றின் பெயரால் நம்மைப் பிரித்தாள்வதற்கு அனுமதிக்க மாட்டோம் என்று யுகாதி திருநாளில் சபதமேற்போம்.
‘புத்தாண்டில் புதுப்புது வெற்றிகள் குவியட்டும்; ஆரோக்கியமும் அன்பும் நிறையட்டும்’ என மனப்பூர்வமாக வாழ்த்துகிறேன் எனத் தெரிவித்துள்ளார்.