கோவை மாவட்டம் தடாகம் பகுதியில் சுற்றி திரிந்த சின்னத்தம்பி காட்டு யானையை வனத்துறையினர் மயக்க ஊசி போட்டு பிடித்து டாப்சிலிப் பகுதியில் விட்டனர். ஆனால் சின்னத்தம்பி தனது வாழ்விடத்திற்கு திரும்புவதற்காக சுமார் 100 கி.மீ கடந்து உடுமலைப்பேட்டை அருகே இருக்கும் சில கிராமங்களில் சுற்றி திரிந்தது. தொடர்ந்து கடந்த சில தினங்களாக கண்ணாடிப்புத்தூர் கிராமத்தை சுற்றி வந்த சின்னத்தம்பி, பயிர்களை சேதப்படுத்துவதாக ஒரு தரப்பினர் குற்றச்சாட்டு வைத்தனர்.
இதற்கிடையே, சாதுவாக மாறி இருக்கும் சின்னத்தம்பி யானையை காட்டுக்குள் விரட்டினாலும் ஊருக்குள் திரும்பிவிடுகிறது. சின்னத்தம்பி யானையைப் பிடித்து முகாமில் அடைப்பதைத் தவிர வேறு வழியில்லை என தமிழக வனத்துறை நேற்று நீதிமன்றத்தில் கூறியிருந்தது. இந்நிலையில், தமிழக பட்ஜெட் மீதான விவாதத்தின் இன்றைய நாளில் சின்னத்தம்பி யானையின் தற்போதைய நிலை என்ன என சட்டப்பேரவையில் கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு பதிலளித்த வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன், தினசரி கதாநாயகன் சின்னத்தம்பிதான். உயர் நீதிமன்ற தீர்ப்புக்காக காத்திருக்கிறோம். மக்களிடமிருந்து மிருகங்களும், மிருகங்களிடமிருந்து மக்களும் காப்பாற்றப்படுவார்கள். எந்த மிருகங்களையும் துன்புறுத்த வேண்டிய அவசியம் இல்லை என பதிலளித்தார்.