மலையாளத்தின் புகழ்பெற்ற கவிஞர், பாடலாசிரியர் மறைந்த ஓ.என்.வி குரூப். இலக்கியத்தில் உயரிய விருதுகளில் ஒன்றான ஞானபீட விருது, பத்ம விபூஷன், பத்மஸ்ரீ விருதுகளையும் இவர் பெற்றுள்ளார். இந்நிலையில் இவரது பெயரில் ஓ.என்.வி கலாச்சார அகாதெமி ஆண்டுதோறும் வழங்கி வரும் ஓஎன்வி இலக்கிய விருது, இந்த ஆண்டு தமிழ் பாடலாசிரியரும் எழுத்தாளருமான வைரமுத்துவுக்கு வழங்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் ஏற்கனவே இவர் மீது பாலியல் புகார் தெரிவித்த பிரபல பாடகி சின்மயி, இதற்கு கடும் எதிர்ப்புகளைப் பதிவு செய்துள்ளார். இவர் மீது ’மீ டூ’ இயக்கத்தின் கீழ் 17 பெண்கள் இதுவரை பாலியல் புகார் தெரிவித்துள்ள நிலையில், வைரமுத்துவுக்கு இந்த மரியாதைக்குரிய விருது வழங்கப்படுவதற்கு சின்மயி கடும் கண்டனங்களைத் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் சின்மயிக்கு ஆதரவாக பிரபல மலையாள நடிகை பார்வதி குரல் எழுப்பியுள்ளார். இது குறித்து அவர் பகிர்ந்துள்ள பதிவில் "ஓஎன்வி சார் எங்கள் மாநிலத்தின் பெருமை. ஒரு கவிஞராகவும் பாடலாசிரியராகவும் ஆற்றிய பங்கு ஈடு இணையற்றது. அவரது படைப்புகளால் எங்கள் மனங்களும் இதயங்களும் பெரும் பலன் அடைந்துள்ளன, எங்கள் கலாச்சாரத்தையும் செறிவூட்டியுள்ளன.
பாலியல் குற்றங்கள் முன்வைக்கப்பட்ட ஒருவருக்கு அவரது பெயரால் இத்தகைய மரியாதையை வழங்குவது, அவருக்கு செய்யும் அவமதிப்பு" எனப் பதிவிட்டுள்ளார்.
”கலையா, படைப்பாளியா என்ற விவாதத்தை என்னிடம் எடுத்து வந்தீர்கள் என்றால், நான் கலையைப் படைக்கும் படைப்பாளிகளின் மனிதத்துவத்தை தான் தேர்ந்தெடுப்பேன். இதுபோன்ற செயல்களால் பிறரின் வாழ்க்கையை கெடுக்கும் நபர்களின் கலையை அணுகாமலே என்னால் வாழ முடியும்" என்றும் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் மலையாள திரைப் பிரபலங்களான அஞ்சலி மேனன், கீது மோகன்தாஸ் உள்ளிட்டோரும் சின்மயிக்கு ஆதரவாக குரல் எழுப்பியுள்ளனர். மேலும் பிரபல கர்நாடக இசைப் பாடகர் டி.எம்.கிருஷ்ணா, ”17 பெண்கள் பாலியல் குற்றம் சுமத்திய ஒருவருக்கு இந்தச் சமூகம் மேலும் வலுசேர்க்கும் வகையில் இவ்விருதினை வழங்குவது, மிகவும் அவமானத்திற்கு உரிய ஒன்று” என சாடியுள்ளார்.