தமிழ்நாடு குழந்தை உரிமைகள் கண்காணிப்பகம், குழந்தை உழைப்பு எதிர்ப்பு பிரச்சாரம், பங்கேற்பு உரிமையை உறுதிபடுத்தும் கூட்டமைப்பு, தமிழக கல்வி உரிமை கூட்டமைப்பு ஆகியவை இணைந்து, குழந்தைகள் உரிமைக்கான தேர்தல் அறிக்கையை தயார் செய்து, அதனை சட்ட ஆணைய உறுப்பினரும், உயர் நீதிமன்ற முன்னாள் நீதிபதியுமான விமலா வெளியிட்டுள்ளார்.
அந்த தேர்தல் அறிக்கையில், “18 வயதிற்குள்ளான குழந்தைகளின் பாதுகாப்பு குறித்து, கட்சிகள் தங்களது தோ்தல் அறிக்கையில் சேர்க்க வேண்டும். கோரிக்கை வைக்க, குரல் எழுப்ப, வாக்களிக்க 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கே வாய்ப்பிருப்பதால், குழந்தைகள் தங்கள் உரிமைகளைக் கோர பெரியவர்களை நாட வேண்டியதுள்ளது. ஆகவேதான், குழந்தைகளின் கோரிக்கைகளை அரசியல் கட்சிகள் தங்கள் தேர்தல் அறிக்கைகளில், முடிந்தால் குழந்தைகள் உரிமைகளுக்கு என தனி தேர்தல் அறிக்கை வெளியிடவும் வேண்டும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
குழந்தைகளுக்கான உரிமை குறித்து உயர் நீதிமன்ற முன்னாள் நீதிபதி விமலா, நமது இடிவி பாரத்திற்கு அளித்த சிறப்புப் பேட்டியில், ”குழந்தைகளை நாம் கொண்டாடினாலும், உரிமைகளுடன் அவர்கள் வளர்கின்றனரா என்றால், இல்லை. இத்தேர்தல் அறிக்கையின் நோக்கம், வெற்றிபெறப்போகும் வேட்பாளர்கள் குழந்தைகள் உரிமைகள் குறித்து சட்டமன்றத்தில் பேசி, அது சட்டமாக்கப்பட்டு, குழந்தைகள் சம்பந்தப்பட்ட திட்டங்கள் வந்து, அவர்களின் தேவைகள் நிறைவேற்றப்பட வேண்டும் என்பதுதான்.
ஐ.நா குழந்தை உரிமைகளுக்கான சர்வதேச சட்டத்தை இந்திய அரசு ஏற்றுக்கொண்டு 30 ஆண்டுகள் ஆகின்றன. அதன்படி, குழந்தைகள் உரிமை என்பது ஒரு நாட்டின் முன்னேற்றத்தை அளவிடும் முக்கிய அடையாளம். உயிர் வாழ்வதற்கான உரிமை, வளர்ச்சிக்கான உரிமை, பாதுகாப்பு உரிமை, பங்கேற்பு உரிமை என்னும் நான்கினை, 18 வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கு உறுதி செய்ய வேண்டும் என இந்த உடன்படிக்கை பட்டியலிடுகிறது. இந்த உரிமைகளை அரசியலமைப்பு சட்டமும் வழங்கியுள்ளது.
தற்போது 6 முதல் 14 வயது வரையுள்ள கட்டாயக் கல்வியை, பிறப்பு முதல் 18 வயது வரையுள்ள குழந்தைகளுக்கும் கிடைத்திட கட்டாய கல்வி உரிமைச் சட்டம் 2009-ஐ முழுமையாக நடைமுறைப்படுத்த வேண்டும். கல்வி என்பது ஏட்டுக் கல்வி மட்டுமல்ல. அது வாழ்க்கைக் கல்வி. குழந்தைகள் மீதான பாலியல் வன்கொடுமையை தடுத்திட, சமூகத்திற்கு புரிதலை ஏற்படுத்த வேண்டும். மேலும், குற்றம் புரிந்தவருக்கு தண்டனை அளிப்பதால் மட்டும், வன்கொடுமையால் பாதித்த குழந்தைக்கு நீதி கிடைத்து விடுவதில்லை.
லட்சக்கணக்கான குழந்தைகள் காணாமல் போகின்றனர். தமிழ்நாட்டில் மட்டும் ஒரு நாளைக்கு ஐந்து குழந்தைகள் காணாமல் போவதாகக் கூறப்படுகிறது. இது குறித்து வழக்கு வந்த போது, குழந்தைகள் காணாமல் போனால் அதனை பதிவு செய்வதற்கான சட்டங்கள் இந்திய தண்டனைச் சட்டத்தில் இல்லை என்பதை உச்ச நீதிமன்ற நீதிபதிகள் சுட்டிக்காட்டினர். மேலும், குழந்தைகள் காணாமல் போய் அவர்களை கண்டுபிடிக்க முடியாத பட்சத்தில், ’கடத்தப்பட்டவர்கள்’ எனப்பதிவு செய்தால்தான் முழுமையாக விசாரித்து கண்டறிய முடியும். அதோடு, கடத்தப்படும் குழந்தைகள் எதற்காக பயன்படுத்தப்படுகிறார்கள் என்பதை நினைத்துப் பார்த்தால் நெஞ்சம் கலங்குகிறது.
எனவே, குழந்தைகளுக்கு ஏற்ற எதிர்காலத்தை உருவாக்க வேண்டும். இந்த சமுதாயம் அவர்களை கட்டமைக்க வேண்டும். குழந்தைகளின் உரிமைகளை உறுதி செய்ய வேண்டியது அரசுகளின் கடமை என்கிறது இத்தேர்தல் அறிக்கை. எனவே, மக்கள் பிரதிநிதிகளாக தேர்ந்தெடுக்கப்படவிருக்கும் ஒவ்வொரு சட்டமன்ற உறுப்பினரும், மேற்கண்ட உரிமைகளை குழந்தைகள் அனுபவிப்பதற்கான சூழலை ஏற்படுத்த வேண்டிய பொறுப்பும் கடமையும் உள்ளவர்கள்” எனக் கூறினார்.
இதையும் படிங்க: தாகம் தீர்த்த ஜார்க்கண்டின் 'மலை' மனிதன்!