சென்னை புளியந்தோப்பு சாஸ்திரி நகர் 12ஆவது தெருவைச் சேர்ந்தவர் அரிகிருஷ்ணன் (32). அவர், சேலத்தில் தங்கி அங்குள்ள தனியார் நிறுவனம் ஒன்றில் பணியாற்றிவருகிறார். அவரது மனைவி பாக்கியலட்சுமி (26) மீன் வியாபாரம் செய்துவருகிறார். அவர்களுக்கு பிரகாஷ்ராஜ் (5), கோகுல்ராஜ் (2) எனும் இரு மகன்கள் உள்ளனர்.
பாக்கியலட்சுமிக்கு பவானி (20) என்னும் தங்கை உள்ளார். அவரும் அருண்குமார் (22) என்பவரும் காதலித்துவந்துள்ளனர். அதற்கு பாக்கியலட்சுமி எதிர்ப்பு தெரிவித்து வந்துள்ளார். இதற்கிடையில் பவானியும் அருண்குமாரும் திருமணம் செய்துகொண்டனர். இந்த நிலையில் கடந்த ஜூலை மாதம் 18ஆம் தேதி அருண்குமார், பவானியுடன் ஆவடி வள்ளலார் தெருவில் வாடகைக்கு வீடு எடுத்து குடிபுகுந்தார்.
அவர்களுடன் பாக்கியலட்சுமியின் 2ஆவது மகன் கோகுல்ராஜை அழைத்துக்கொண்டு வந்து உள்ளனர். அவ்வாறு இருக்கையில் செப்டம்பர் 5ஆம் தேதி கோகுல்ராஜ் வீட்டு படிக்கட்டில் இருந்து விழுந்து தலையில் காயம் ஏற்பட்டுவிட்டதாக கூறி எழும்பூர் மருந்துவமனையில் அருண்குமார்-பவானி தம்பதி சேர்த்தனர்.
அந்த தகவல் அறிந்த பாக்கியலட்சுமி மகன் அடிபட்டதில் தனக்கு சந்தேகம் உள்ளதாக காவல்நிலையத்தில் புகார் அளித்தார். அந்தப் புகாரின் அடிப்படையில் காவல் துறையினர் நடத்திய விசாரணையில், அருண்குமார் தனது திருமணத்திற்கு முதலில் எதிர்ப்பு தெரிவித்த பாக்கியலட்சுமியை பழிவாங்குவதற்காக குடிபோதையில் குழந்தையை கரண்டியால் தாக்கியுள்ளதும், அதன்பின் மாடிபடியிலிருந்து விழுந்துவிட்டதாக நாடாகமாடியதும் தெரியவந்தது.
அதனால் அவர் கைதுசெய்யப்பட்டார். இதற்கிடையில் குழந்தை மருத்துவமனையில் உயிரிழந்துள்ளது. தற்போது அருண்குமார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
இதையும் படிங்க: இளைஞர் அடித்துக் கொலை: மகனின் சாவுக்கு நீதி கேட்டு தாயார் மனு!