இந்திய அளவில் கரோனா அதிகமுள்ள மாநிலங்களில் முதலிடத்தில் மகாராஷ்ட்ராவும், இரண்டாமிடத்தில் தமிழ்நாடும் உள்ளன. மாநிலம் முழுவதும் தொற்று பரவி வரும் போதும் சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் ஆகிய நான்கு மாவட்டங்களில் நாளுக்கு நாள் அதி தீவிரமடைந்து வருகிறது.
கரோனாவை கட்டுப்படுத்துவதற்காக கடந்த மார்ச் மாதம் முதல் பல்வேறு கட்டமாக ஊரடங்கு நீட்டிக்கப்பட்டும், பின்னர் அதில் தளர்வுகளும் அறிவிக்கப்பட்டன. இருப்பினும் கரோனாவின் தாக்கம் குறையவில்லை. இந்நிலையில், நேற்று முன்தினம் (ஜூன் 15) தமிழ்நாடு அரசு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டது. அதில், சென்னை உள்ளிட்ட நான்கு மாவட்டங்களில் கரோனாவின் தாக்கம் அதிகமுள்ளதால் அதனை கட்டுப்படுத்தும் விதமாக, வரும் 19ஆம் தேதியிலிருந்து 30ஆம் தேதி வரை முழு ஊரடங்கு அமல்படுத்தப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதில் பல்வேறு கட்டுப்பாடுகளை அரசு விதித்துள்ளது. காய்கறி, மளிகைக் கடைகள் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருள்கள் விற்பனை காலை 6 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மட்டுமே செயல்பட வேண்டுமென்றும், மற்ற கடைகளுக்கு அனுமதி இல்லையென்றும் கூறப்பட்டுள்ளது. மருத்துவமனைகள், அவசர தேவைகளுக்கு தடையில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலாளர் சண்முகம் இன்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், வரும் 19 முதல் 30ஆம் தேதி வரை பொது ஊரடங்கு கடுமையாக அமல்படுத்த வேண்டும் என அறிவுறுத்தியுள்ளார். போக்குவரத்து கட்டுப்பாடுகளை பல்வேறு தடுப்புகள், சோதனைச் சாவடிகள் அமைத்து மிகக்கடுமையாக பின்பற்றவும், மீறுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கவும் கூறியுள்ளார்.
அதேபோல், கரோனா கண்டறிதல் சோதனையை தீவிரப்படுத்தி அனைத்து இடங்களிலும் மக்களுக்கு இது குறித்த விழுப்புணர்வு நடவடிக்கைகளை வலுப்படுத்தவும் கேட்டுக்கொண்டுள்ளார். கரோனா பாதித்து வீட்டில் தனிமைப்படுத்திக்கொண்டோரை கண்காணிப்பதிலும் மிகத்தீவிரமாக ஈடுபட வேண்டுமென்று சண்முகம் கூறியுள்ளார்.
இதையும் படிங்க: 'கரோனா தொற்று நடவடிக்கையில் வெளிப்படைத்தன்மை அவசியம்' - ஸ்டாலின்