தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், "திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள கொடுமுடியாறு நீர்த்தேக்கத்திலிருந்து கார் பருவ சாகுபடிக்கு தண்ணீர் திறந்துவிடுமாறு விவசாயப் பெருமக்களிடமிருந்து கோரிக்கைகள் வந்துள்ளன.
விவசாயப் பெருமக்களின் கோரிக்கையினை ஏற்று, திருநெல்வேலி மாவட்டம், கொடுமுடியாறு நீர்த்தேக்கத்திலிருந்து நாங்குநேரி, ராதாபுரம் வட்டங்களிலுள்ள வள்ளியூரான்கால், படலையார்கால், ஆத்துக்கால் ஆகியவற்றின் மூலம் பாசனம் பெறும் இரண்டு ஆயிரத்து 548.94 ஏக்கர் பாசன நிலங்களுக்கு கார் பருவ சாகுபடிக்காக 28.8.2020 முதல் 25.11.2020 வரை விநாடிக்கு 50 க.அடி மிகாமல் தண்ணீர் திறந்துவிடவும்.
அணைக்கு கூடுதல் நீர்வரத்து இருக்கும் பட்சத்தில், முன்னுரிமை அளிக்கப்பட்ட 2 ஆயிரத்து 548.94 ஏக்கர் நிலங்களின் குறைந்தபட்ச தேவைக்கு கூடுதலாக உள்ள நீரினை, வடமலையான்கால் மூலம் பாசனம் பெறும் 3 ஆயிரத்து 231.97 ஏக்கர் நிலங்களுக்கு நாள் ஒன்றுக்கு விநாடிக்கு 100 கன அடி வீதம், நீர் வரத்து மற்றும் இருப்பைப் பொறுத்து, தேவைக்கேற்ப, தண்ணீர் திறந்துவிடவும்" என்று ஆணையிட்டுள்ளார்.
இதனால், திருநெல்வேலி மாவட்டம், நாங்குநேரி, ராதாபுரம் வட்டங்களில் உள்ள 5 ஆயிரத்து 780.91 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொண்டார்.
மேலும், விவசாயப் பெருமக்கள் நீரை சிக்கனமாக பயன்படுத்தி, நீர் மேலாண்மை மேற்கொண்டு உயர் மகசூல் பெற வேண்டும் எனவும் முதலமைச்சர் கேட்டுக் கொண்டுள்ளார்.