சென்னை தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடன் காணொலி வாயிலாக ஆலோசனை நடத்தினார்.
இந்த ஆலோசனைக் கூட்டத்தில், தமிழ்நாட்டில் திரையரங்குகள் திறப்பு குறித்தும், நவம்பர் மாதம் வழங்கப்படக்கூடிய தளர்வுகள் குறித்தும் ஆலோசிக்கப்பட்டது.
பண்டிகை காலங்கள், மழைக்காலங்களில் மேற்கொள்ள வேண்டிய கரோனா தடுப்பு நடவடிக்கைகள் தொடர்பாக அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கு எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். மேலும் திரையரங்குகள் திறப்பு குறித்து அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
எடப்பாடி பழனிசாமி ஆலோசனைக் கூட்டத்தில் கூறியதாவது:
தமிழ்நாட்டில் கரோனா தடுப்பு நடவடிக்கையை அரசு எடுத்த காரணத்தால், படிப்படியாக தொற்று குறைந்துவருகிறது. இறப்பு விழுக்காடு 1.53 ஆக இருக்கிறது.
இதுவரை கரோனா தடுப்பு நடவடிக்கைக்கு தமிழ்நாடு அரசு ரூ.7,322 கோடி செலவு செய்துள்ளது. மாவட்டங்களில் கரோனாவிற்குத் தேவையான மருந்துகளை இருப்பு வைத்திருக்க வேண்டும்.
கடலோர மாவட்டங்களில் மழைக்காலங்களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க வேண்டும். நிலச்சரிவு ஏற்படக்கூடிய இடங்களைக் கண்டறிந்து கவனத்தில் கொள்ள வேண்டும்.
தமிழ்நாட்டில் பள்ளிகள், கல்லூரிகள், திரையரங்குகள் திறப்பு குறித்து மருத்துவ வல்லுநர் குழு ஆலோசனைக்குப் பிறகு அறிவிக்கப்படும்.
கரோனா வைரஸ் குறித்தும் முகக்கவசம் அணிவது குறித்தும், மாவட்ட நிர்வாகம், மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.
தீபாவளி, பண்டிகை காலங்களில் நோய் பரவாமல் இருக்க கிருமிநாசினி தெளிக்க வேண்டும். பொதுமக்கள் கட்டாயம் முகக்கவசம் அணிவதை மாவட்ட ஆட்சியர்கள் உறுதிசெய்ய வேண்டும்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.