சென்னை: பிளஸ் 2 மாணவர்களுக்கு மதிப்பெண் வழங்குவதற்கு அமைக்கப்பட்ட குழுவின் வழிமுறைகள் குறித்து முதலமைச்சர் ஆலோசனை நடத்தினார்.
கோவிட்-19 காரணமாக, மே மாதம் 2020-21 கல்வியாண்டிற்கான 12ஆம் வகுப்புப் பொதுத் தேர்வு ஒத்திவைக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து 12ஆம் வகுப்புப் பொதுத்தேர்வு நடத்துவது குறித்து மாணவர்கள், பெற்றோர்கள், ஆசிரியர்கள், கல்வியாளர்கள், பொதுமக்கள் ஆகியோரின் கருத்துகளை ஆன்லைன் மூலம் ஜூன் 3ஆம் தேதி பள்ளிக்கல்வித்துறை கேட்டறிந்தது.
அதனைத் தொடர்ந்து, ஜூன் 5 ஆம் தேதி தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் , மாநில பாடத்திட்டத்தில் படிக்கும் மாணவர்களுக்கு 12ஆம் வகுப்பு பொதுத் தேர்வு ரத்துச் செய்யப்படுகிறது என, அறிவித்தார்.
மாணவர்களுக்கு மதிப்பெண்கள் எவ்வாறு வழங்குவது என்பதை முடிவு செய்வதற்காக, பள்ளிக் கல்வித்துறை, உயர் கல்வித்துறையின் செயலாளர்களும், சென்னைப் பல்கலைக் கழகத்தின் துணைவேந்தர், பள்ளிக் கல்வித்துறை ஆணையர், ஒருங்கிணைந்த மாநிலத் திட்ட இயக்குனர், அரசுத் தேர்வுத்துறை, மெட்ரிக்குலேசன் பள்ளிகள் இயக்குனர்கள், மூன்று தலைமை ஆசிரியர்கள் ஆகியோர் கொண்ட குழு அமைக்கப்பட்டது.
சான்றிதழ் சரிபார்க்க உத்தரவு
இந்தக் குழுவினர் பல்வேறு கட்டங்களில் ஆலோசனை செய்து, 10,11ஆம் வகுப்புகளில் மாணவர்களின் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையிலோ, சிபிஎஸ்சி மாணவர்களுக்கு மதிப்பெண்கள் வழங்கியதன் அடிப்படையில் என, 5 முறைகளில் வழங்குவதற்கு திட்டமிட்டு இருந்தனர்.
இந்த நிலையில், அரசுத் தேர்வுத்துறை இயக்குனர் உஷாராணி , 12ஆம் வகுப்பில் 2020-21 ம் கல்வியாண்டில் படித்த மாணவர்களுக்கு மதிப்பெண்கள் வழங்குவதற்காக, அவர்களின் 10ஆம் வகுப்பு மதிப்பெண்களை ஜூன் 25 ஆம் தேதி முதல் 30 ஆம் தேதிக்குள் சரிபார்த்து அனுப்ப வேண்டும்.
மாணவர்களின் மதிப்பெண்களை சாிபார்க்கும் போது 11ஆம் வகுப்பில் சேர்வதற்கு மாணவர்கள் வழங்கிய மதிப்பெண் சான்றிதழின் பதிவு எண்களையும் சரிபார்க்க வேண்டும் என, உத்தரவிட்டு இருந்தார்.
சிபிஎஸ்இ, ஐசிஎஸ்இ போன்ற வேறு பாடத்திட்டத்தில் படித்த மாணவர்களின் 10ஆம் வகுப்பு மதிப்பெண்கள் பெறும் பணிகள் நடைபெற்று வருகிறது.
பாதிக்காத வகையில் அறிவிப்பு
இந்த நிலையில், 12ஆ ம் வகுப்பு மாணவர்களுக்கு மதிப்பெண்கள் வழங்குவது குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், சென்னை தலைமைச் செயலகத்தில் உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி, பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, மற்றும் துறை அலுவலர்களுடன் ஆலோசனை நடத்தினார்.
இதுகுறித்து பள்ளிகல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கூறுகையில்,"12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மதிப்பெண் வழங்குவதற்கு அமைக்கப்பட்ட குழுவின் வழிமுறைகள் குறித்து முதலமைச்சர் ஆலோசனை நடத்தினார்.
அப்போது மதிப்பெண்களை எவ்வாறு வழங்கலாம் என்பது குறித்து சில வழிமுறைகளை தெரிவித்துள்ளனர். அதன் அடிப்படையிலும், முதலமைச்சருக்கு வரப்பெற்ற கருத்துகளின் அடிப்படையிலும், மாணவர்கள் பாதிக்காத வகையில் மதிப்பெண் வழங்கும் முறையை முதலமைச்சர் அறிவிப்பார் " என்றார்.