புதுச்சேரி என்.ஆர். காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளராக இருந்து வந்தவர் பாலன் (68). இவருக்கு கடந்த 23ஆம் தேதி கரோனா தொற்று உறுதியானதையடுத்து, மணக்குள விநாயகர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சையளிக்கப்பட்டு வந்த நிலையில், நேற்றிரவு பாலன் உயிரிழந்தார். பாலனின் மறைவிற்கு பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று (ஜூலை 28) வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், ” அகில இந்திய என்.ஆர். காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளரும், புதுச்சேரி முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினருமான பாலன் அவர்கள் உடல் நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பலனின்றி இன்று காலமானார் என்ற செய்தியை அறிந்து மிகுந்த வேதனை அடைந்தேன்.
பாலன் அவர்கள் புதுச்சேரி சட்டப்பேரவை உறுப்பினராகவும், பாப்ஸ்க்கோ மற்றும் ஏ.எஃப்.டி பஞ்சாலை தலைவராகவும் பொது வாழ்வில் தன்னை ஈடுபடுத்திக்கொண்டு, புதுச்சேரி மக்களின் நலன்களுக்காக உழைத்தவர். புதுவை மக்களின் நன்மதிப்பை பெற்றவர். பாலன் அவர்களை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபங்களையும் தெரிவித்துக்கொள்கிறேன் “ என்று தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: கரோனா பாதிப்பு: என்.ஆர். காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் உயிரிழப்பு!