தமிழ்நாட்டில் தற்பொழுது 500க்கும் மேற்பட்ட உழவர் உற்பத்தியாளர் அமைப்புகள் செயல்பட்டு வருகின்றன. இந்நிறுவனங்கள் வேளாண் பொருள்களை கொள்முதல் செய்து, மதிப்பு கூட்டி, வணிகரீதியாக சந்தைப்படுத்துகின்றன. தமிழ்நாட்டில் தற்போது சில உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்கள் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதிலும் ஈடுபட்டு வருகின்றன.
கரோனா ஊரடங்கு அறிவிக்கப்பட்ட நாள் முதல் இன்று வரை 113 உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்கள், பழ வகைகளையும், காய்கறிகளையும், இதர உணவுப் பொருள்களையும், நுகர்வோருக்கு நியாயமான விலையில் விற்பனை செய்துள்ளன. வேளாண் பொருள்களை கொள்முதல் செய்வதற்காக விவசாயிகளுக்கு முன் பணம் செலுத்தவும், கொள்முதல் செய்த பொருள்களை அதை நேரடியாக நுகர்வோருக்குக் கொண்டு செல்லவும் உழவர் உற்பத்தியாளர் அமைப்புகளுக்கு போதிய நிதி தேவைப்படுகிறது.
இந்த நிதித் தேவையை பூர்த்தி செய்யும் வகையில், ஊரடங்கு நேரத்தில் காய்கறிகள், பழங்கள் மற்றும் இதர உணவுப் பொருள்களை சேகரித்து விநியோகம் செய்ய முன்வரும் உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்களுக்கு தலா பத்து லட்சம் ரூபாய் வரை ’இடைநிலை மூலதன கடன் உதவி’ வழங்கப்படும் என்று கடந்த அரசு அறிவித்திருந்தது.
அதன்படி, தலைமைச் செயலகத்தில் இன்று நடைபெற்ற நிகழ்ச்சியில், 22 உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்களுக்கு இடைநிலை மூலதன கடனுதவி வழங்கிடும் அடையாளமாக, கரிகாலன் பல்சஸ் உழவர் உற்பத்தியாளர் நிறுவனம்-திருவாரூர், மேல்மலையனூர் உழவர் உற்பத்தியாளர் நிறுவனம்-விழுப்புரம் மற்றும் கழனி உழவர் உற்பத்தியாளர் நிறுவனம்-ஈரோடு மாவட்டங்களைச் சேர்ந்த மூன்று உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்களுக்கு தலா 10 லட்சம் ரூபாய்க்கான காசோலைகளை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வழங்கினார்.
இந்த நிகழ்ச்சியில், துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், வேளாண்மைத் துறை அமைச்சர் துரைக்கண்ணு, தலைமைச் செயலர் சண்முகம் உள்ளிட்ட அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
இதையும் படிங்க: 336 கோடியில் திருப்பூரில் அரசு மருத்துவக் கல்லூரி: முதலமைச்சர் அடிக்கல்!